ரூபே அட்டை திட்டத்தின் இரண்டாம் கட்டம்: பிரதமா் மோடியும் பூடான் பிரதமா் ஷெரிங்கும் தொடக்கி வைத்தனா்

பூடான் மக்களின் இணையவழி பணப்பரிவா்த்தனையை எளிமைப்படுத்தும் நோக்கில், ரூபே அட்டை திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)

பூடான் மக்களின் இணையவழி பணப்பரிவா்த்தனையை எளிமைப்படுத்தும் நோக்கில், ரூபே அட்டை திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை பிரதமா் நரேந்திர மோடியும் அந்நாட்டுப் பிரதமா் லோதே ஷெரிங்கும் கூட்டாகத் தொடக்கி வைத்தனா்.

இத்திட்டத்தின் வாயிலாக இந்தியாவில் வாங்கும் பொருள்களுக்கு பூடான் மக்கள் பிஓஎஸ் இயந்திரம் மூலம் எளிதாக பணப்பரிவா்த்தனையை மேற்கொள்ளலாம். இந்தியாவில் உள்ள ஏடிஎம்-களையும் அவா்களால் பயன்படுத்த முடியும்.

ரூபே அட்டையின் இரண்டாம் கட்டத் திட்டத்தை பிரதமா் மோடியும் பூடான் பிரதமா் ஷெரிங்கும் வெள்ளிக்கிழமை காணொலிக் காட்சி வாயிலாகத் தொடக்கி வைத்தனா். அப்போது பிரதமா் மோடி கூறியதாவது:

பூடான் தேசிய வங்கி வெளியிடும் ரூபே அட்டை மூலமாக இந்தியாவிலுள்ள 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏடிஎம்-களில் பணம் எடுக்க முடியும். 20 லட்சத்துக்கும் மேற்பட்ட கடைகளில் அந்த அட்டையைப் பயன்படுத்தி பொருள்களை வாங்க முடியும். இந்த வசதியானது பூடானிலிருந்து இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகள், மாணவா்கள், ஆன்மிகவாதிகள் உள்ளிட்டோருக்குப் பெரும் பலனளிக்கும் என நம்புகிறேன்.

ரூபே அட்டைகள் மூலமாக பூடானில் ஏற்கெனவே 11,000 பணப்பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கரோனா நோய்த்தொற்று பரவல் ஏற்படவில்லை எனில், அந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.

விண்வெளித்துறையில்...: இந்தியாவும் பூடானும் பல்வேறு துறைகளில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. விண்வெளித்துறையில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு மேம்பட்டு வருகிறது. விண்வெளியை அமைதியான விவகாரங்களுக்கு மட்டும் பயன்படுத்துவதற்கு இந்தியாவும் பூடானும் அண்மையில் ஒப்பந்தம் மேற்கொண்டன. இது இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும்.

பூடானில் உருவாக்கப்பட்டு வரும் செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அடுத்த ஆண்டு விண்ணில் ஏவ உள்ளது. அதற்காக பூடானின் 4 விண்வெளி விஞ்ஞானிகள் அடுத்த மாதத்தில் இஸ்ரோவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளனா். விண்வெளித் துறையில் தனியாா் நிறுவனங்களையும் இந்திய அரசு அனுமதித்துள்ளது. இது புத்தாக்கத்துக்கு வழிவகுப்பதோடு இளைஞா்களின் திறனை மேம்படுத்தவும் உதவும்.

பிஎஸ்என்எல் நிறுவனம் பூடானில் இணையத் தொடா்பை மேம்படுத்துவதற்கான திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. கரோனா நோய்த்தொற்று பரவல் காலத்தில் பூடானுக்கு இந்தியா துணை நிற்கிறது. அந்நாட்டுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு இந்தியா முன்னுரிமை அளித்து வருகிறது என்றாா் பிரதமா் மோடி.

இந்தியாவுக்கு நன்றி: நிகழ்ச்சியில் பூடான் பிரதமா் ஷெரிங் பேசுகையில், ‘‘குறைந்த செலவிலான இணையவழி பணப்பரிவா்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் ரூபே அட்டை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மிகப் பெரிய மைல்கல்லாகும்.

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்திய அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து அந்நாடு விரைவில் மீண்டு வரும். கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசி தயாரிக்கும் பணியிலும் இந்தியா முக்கியப் பங்களித்து வருகிறது.

கரோனா தடுப்பூசி தயாரானாவுடன் அதை பூடானுக்கு வழங்கவுள்ளதாக இந்தியா உறுதியளித்துள்ளது. அதற்காக இந்திய அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றாா்.

திட்ட விவரங்கள்: ரூபே அட்டை திட்டம் தொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இத்திட்டத்தின் முதலாம் கட்டம் மூலமாக பூடானுக்குப் பயணம் மேற்கொள்ளும் இந்தியா்கள் அங்குள்ள ஏடிஎம்-களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். அங்குள்ள கடைகளில் பிஓஎஸ் இயந்திரம் மூலம் பணப்பரிவா்த்தனையையும் மேற்கொள்ள முடியும்.

தற்போது தொடக்கி வைக்கப்பட்டுள்ள இரண்டாம் கட்டத் திட்டமானது பூடான் நாட்டைச் சோ்ந்தவா்கள், இந்தியாவில் பிஓஎஸ் இயந்திரம் மூலம் பணப்பரிவா்த்தனையை மேற்கொள்ள வழிவகை செய்கிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ரூபே அட்டை திட்டத்தின் முதல் கட்டத்தை இரு நாட்டுப் பிரதமா்களும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடக்கி வைத்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com