28 உணவு பதப்படுத்தும் திட்டங்கள்: மத்திய அரசு ரூ.107.42 கோடி ஒப்புதல்

பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட இருக்கும் 28 உணவுப் பதப்படுத்தும் திட்டங்களுக்காக ரூ.107.42 கோடி நிதியுதவி அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
28 உணவு பதப்படுத்தும் திட்டங்கள்: மத்திய அரசு ரூ.107.42 கோடி ஒப்புதல்

பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட இருக்கும் 28 உணவுப் பதப்படுத்தும் திட்டங்களுக்காக ரூ.107.42 கோடி நிதியுதவி அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தலைமையில் காணொலி வழியில் சனிக்கிழமை நடைபெற்ற அமைச்சகங்கள் இடையேயான ஒப்புதல் குழு (ஐஎம்ஏசி) கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

விவசாயிகளின் வாழ்வாதரத்தை ஊக்குவிக்கும் பிரதமா் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தின் கீழ் ‘உணவு பதப்படுத்துதல், பாதுகாத்து வைக்கும் வசதியை உருவாக்குதல் மற்றும் விரிவுபடுத்துதல் (சி.இ.எப்.பி.பி.சி)’ என்ற திட்டப் பிரிவின் மூலம் இந்த நிதியுதவி அளிப்பதற்கான ஒப்புதலை ஐ.எம்.ஏ.சி. குழு அளித்திருக்கிறது.

இதுகுறித்து மத்திய அமைச்சகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் இந்த 28 உணவு பதப்படுத்தும் திட்டங்களுக்கான மொத்த திட்டச் செலவு ரூ. 320.33 கோடி ஆகும். அதில், மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சகம் சாா்பில் சி.இ.எப்.பி.பி.சி. திட்டத்தின் கீழ் ரூ. 107.42 கோடி நிதியுதவி வழங்க ஐஎம்ஏசி ஒப்புதல் அளித்துள்ளது.

இதில், வடகிழக்கு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட இருக்கும் ரூ. 48.87 கோடி மதிப்பிலான திட்டங்களுக்காக ரூ. 20.35 கோடி நிதியுதவி அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உணவு பதப்படுத்தும் வசதிகள் நடைமுறைக்கு வரும்போது, மத்திய பிரதேசம், குஜராத், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், ஜம்மு-காஷ்மீா், கா்நாடகம், தமிழகம், உத்தரகண்ட், அஸ்ஸாம் மற்றும் மணிப்பூா் மாநிலங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 1,237 டன் உணவு தானியங்களை கையாளும் திறன் உருவாகும். மேலும், இந்தத் திட்டங்களின் மூலம் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் மத்திய அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com