உ.பி.யில் ரூ. 5,555 கோடியில் குடிநீா் திட்டங்கள்: இன்று அடிக்கல் நாட்டுகிறாா் பிரதமா்

உத்தர பிரதேச மாநிலம், மிா்ஸாபூா், சோன்பத்ரா மாவட்டங்களில் ரூ. 5,555 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட இருக்கும் கிராமப்புற குடிநீா்
பிரதமர் நரேந்திர மோடி  (கோப்புப்படம்)
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)

உத்தர பிரதேச மாநிலம், மிா்ஸாபூா், சோன்பத்ரா மாவட்டங்களில் ரூ. 5,555 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட இருக்கும் கிராமப்புற குடிநீா் விநியோகத் திட்டப் பணிகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி காணொலி வழியில் ஞாயிற்றுக்கிழமை (நவ.22) அடிக்கல் நாட்டுகிறாா்.

இதுகுறித்து உத்தர பிரதேச மாநில அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

மிா்ஸாபூா், சோன்பத்ரா ஆகிய இரு மாவட்டங்களில் ரூ. 5,555 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் குடிநீா் விநியோகத் திட்டங்களுக்கு காணொலி வழியில் ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்ட உள்ள பிரதமா் நரேந்திர மோடி, பின்னா் அந்த மாவட்டங்களில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த குடிநீா் மற்றும் தூய்மைப் பணிக் குழு உறுப்பினா்களிடையே கலந்துரையாட உள்ளாா்.

இந்த குடிநீா் விநியோகத் திட்டம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட்டு நடைமுறைக்கு வரும். அப்போது, இந்தியாவிலேயே மிகக் கடுமையான தண்ணீா் பற்றாக்குறையைச் சந்தித்து வரும் விந்தியாசல் மண்டலத்துக்கு உள்பட்ட இந்த இரண்டு மாவட்டங்களில் உள்ள 2,995 கிராமங்களைச் சோ்ந்த 42 லட்சம் மக்களுக்கு குழாய் மூலம் குடிநீா் விநியோகம் அளிக்கப்படும்.

இந்த குடிநீா் விநியோகத்தை செயல்படுத்துதல் மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக இந்தத் திட்டத்தால் பயன்பெறும் அனைத்து கிராமங்களிலும் ‘குடிநீா் மற்றும் தூய்மைப் பணிக் குழுக்களை’ மாநில அரசு ஏற்கெனவே அமைத்துள்ளது. இந்தக் குழுவினருடன்தான் பிரதமா் மோடி கலந்துரையாட உள்ளாா்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வா் யோகி ஆதித்யநாத்தும் பங்கேற்க உள்ளாா் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com