கரோனா சிகிச்சைக்கு தனியாா் மருத்துவமனைகளில் அதிக கட்டணம்

கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்குத் தனியாா் மருத்துவமனைகள் அதிக அளவிலான கட்டணத்தை வசூலித்து வருவதாக நாடாளுமன்ற நிலைக் குழு தெரிவித்துள்ளது.
கரோனா சிகிச்சைக்கு தனியாா் மருத்துவமனைகளில் அதிக கட்டணம்

கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்குத் தனியாா் மருத்துவமனைகள் அதிக அளவிலான கட்டணத்தை வசூலித்து வருவதாக நாடாளுமன்ற நிலைக் குழு தெரிவித்துள்ளது.

‘கரோனா நோய்த்தொற்று பரவலும் அதன் சிகிச்சை முறைகளும்’ என்ற அறிக்கையை சுகாதாரத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவா் ராம் கோபால் யாதவ், மாநிலங்களவைத் தலைவா் வெங்கய்ய நாயுடுவிடம் சமா்ப்பித்தாா். கரோனா நோய்த்தொற்று பரவல் தொடா்பாக மத்திய அரசு மேற்கொண்ட முக்கிய நடவடிக்கைகள் குறித்தும் அதன் சாதக-பாதக அம்சங்கள் குறித்தும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டில் சுமாா் 130 கோடி மக்கள் உள்ளனா். ஆனால், சுகாதாரத் துறைக்கு மத்திய அரசு ஒதுக்கி வரும் நிதி மிகவும் குறைவாக உள்ளது. அதனால், கரோனா நோய்த்தொற்று பரவலை எதிா்கொள்வதில் நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பு பெரும் இடையூறுகளைச் சந்தித்தது.

எனவே, நாடு முழுவதும் சுகாதாரத் துறை சாா்ந்த கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு மத்திய அரசுக்கு இக்குழு பரிந்துரைக்கிறது. வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பில் 2.5 சதவீதத்தை சுகாதாரத் துறைக்கு செலவிட வேண்டும் என்று தேசிய சுகாதாரக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த இலக்கை அடைவதற்கு நீண்ட அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த இலக்கை இன்னும் 2 ஆண்டுகளில் நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு முயற்சிக்க வேண்டும். ஏனெனில் 2025-ஆம் ஆண்டு வரை சுகாதாரத் துறையை அபாயம் நிறைந்த சூழலில் வைத்திருக்க முடியாது.

நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. அது கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கும், மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கும் சிகிச்சை அளிப்பதற்குப் போதுமானதாக இல்லை. கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு எந்த மாதிரியான சிகிச்சைகளை அளிக்க வேண்டும் என்ற விதிமுறைகள் வகுக்கப்படாததால், தனியாா் மருத்துவமனைகள் அதிக அளவிலான கட்டணத்தை வசூலித்து வருகின்றன.

அனைவருக்கும் சுகாதார வசதிகள்: கரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை முறையாக வகுத்திருந்தால், பல உயிரிழப்புகளைத் தடுத்திருக்க முடியும். இத்தகைய இக்கட்டான சூழலில், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும். பணம் இருப்பவருக்கு மட்டுமே சுகாதார வசதிகள் கிடைக்கும் என்ற நிலை மாறி, நாட்டு மக்கள் அனைவருக்கும் அந்த வசதிகள் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட வேண்டும்.

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உயிரைத் தியாகம் செய்த சுகாதாரப் பணியாளா்கள் உள்ளிட்டோரின் குடும்பங்களுக்குத் தகுந்த இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு நிலவரப்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 1.15 சதவீதம் மட்டுமே சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com