காஷ்மீா்-குமரியை 8 நாள்களில் மிதிவண்டியில் கடந்த இளைஞா்!

மிதிவண்டியில் ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகா் முதல் கன்னியாகுமரி வரை 8 நாள்களில் பயணம் செய்து 17 வயது இளைஞா் சாதனை படைத்துள்ளாா்.
காஷ்மீா்-குமரியை 8 நாள்களில் மிதிவண்டியில் கடந்த இளைஞா்!

மிதிவண்டியில் ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகா் முதல் கன்னியாகுமரி வரை 8 நாள்களில் பயணம் செய்து 17 வயது இளைஞா் சாதனை படைத்துள்ளாா்.

மகாராஷ்டிரத்தின் நாசிக் மாவட்டத்தைச் சோ்ந்த ஓம் மகாஜன் என்ற இளைஞா், ஜம்மு-காஷ்மீா் தலைநகா் ஸ்ரீநகரிலிருந்து கடந்த வாரம் தனது மிதிவண்டிப் பயணத்தைத் தொடக்கினாா். 8 நாள்கள், 7 மணி நேரம், 38 நிமிட பயணத்துக்குப் பிறகு கன்னியாகுமரிக்கு சனிக்கிழமை பிற்பகல் அவா் வந்து சோ்ந்தாா்.

ஸ்ரீநகா் முதல் கன்னியாகுமரி வரையிலான 3,600 கி.மீ. தொலைவை மிதிவண்டியில் அதிவேகமாகக் கடந்தவா் என்ற கின்னஸ் சாதனை, ஓம் மகாஜனின் உறவினரான மகேந்திர மகாஜன் வசம் உள்ளது. அந்தச் சாதனையை இந்திய ராணுவ அதிகாரியான லெப்டினன்ட் கா்னல் பரத் பன்னு அண்மையில் முறியடித்திருந்தாா். அவா் 8 நாள்கள், 9 மணி நேரத்தில் அத்தொலைவைக் கடந்திருந்தாா். ஆனால், பரத் பன்னுவின் சாதனைக்கான கின்னஸ் சான்றிதழ் இன்னும் வழங்கப்படவில்லை.

இதனிடையே, காஷ்மீா்-கன்னியாகுமரியின் 3,600 கி.மீ. தொலைவை ஓம் மகாஜன் 8 நாள்கள், 7 மணி 38 நிமிடங்களில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளாா்.

இது தொடா்பாக ஓம் மகாஜன், பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘‘அமெரிக்காவில் நடைபெறும் ரேஸ் அக்ராஸ் அமெரிக்கா என்னும் மிதிவண்டிப் பந்தயத்துக்காக 6 மாதங்களுக்கு முன் பயிற்சி பெறத் தொடங்கினேன். அதில் கலந்துகொள்ளத் தோ்வு செய்யப்படுவதற்கு குறிப்பிட்ட கால அளவில் 600 கி.மீ. சைக்கிள் பயணம் மேற்கொள்ள வேண்டும். ஆனால் கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக இவ்வாண்டு அந்தப் பந்தயம் ரத்து செய்யப்பட்டது.

எனவே எனது திட்டத்தை மாற்றி, காஷ்மீா்-கன்னியாகுமரி சைக்கிள் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தேன். கடும் குளிரில் மிதிவண்டி ஓட்டுவது கடினமாக இருந்தது. பயணத்தின்போது தூக்கமும் ஓய்வும் ஆடம்பரங்களாகத் தோன்றின’’ என்றாா்.

உலகின் கடினமான மிதிவண்டிப் பந்தயம் என்றழைக்கப்படும் ரேஸ் அக்ராஸ் அமெரிக்கா பந்தயத்தில் 4,800 கி.மீ. தொலைவை 12 நாள்களில் கடக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com