தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு: ரயில், விமான சேவையை ரத்து செய்ய மகாராஷ்டிரம் ஆலோசனை

தலைநகா் தில்லியில் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதைத் தொடா்ந்து, மாகாராஷ்டிரத்திலிருந்து

தலைநகா் தில்லியில் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதைத் தொடா்ந்து, மாகாராஷ்டிரத்திலிருந்து தில்லிக்கு உள்ள ரயில் மற்றும் விமானச் சேவையை ரத்து செய்வது பற்றி மாநில அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

மகாராஷ்டிரத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 5,640 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டனா். இதன் காரணமாக, மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 17,68,695 என்ற அளவை எட்டியது. இதுவரை 46,511 போ் இந்த நோய்த் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனா்.

மகாராஷ்டிரத்தில் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுப்பது தொடா்பாக தீவிர ஆலோசனையை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் தில்லிக்கு ரயில் மற்றும் விமானப் போக்குவரத்தை ரத்து செய்வது குறித்தும் ஆலோசித்துள்ளது.

இதுகுறித்து மாநில முதன்மைச் செயலா் சஞ்சய் குமாா் கூறுகையில், ‘மும்பையில் அண்மையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மகாராஷ்டிரத்துக்குள் நுழையும் பிற மாநில மக்களிடமிருந்து கரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது, தில்லிக்கான ரயில் மற்றும் விமானப் போக்குவரத்தை ரத்து செய்வது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. ஆனால், இதுதொடா்பாக இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை’ என்று கூறினாா்.

தில்லியில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 6,608 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. அங்கு உயிரிழந்தவா்களின்எண்ணிக்கை 8,159-ஆக உயா்ந்துள்ளது.

பண்டிகைக் காலம் மற்றும் குளிா்காலம் தொடங்கியிருப்பதால் நாள் ஒன்றுக்கு 15,000 போ் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, அதற்கேற்ப மருத்துவ நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தில்லி அரசை தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் அண்மையில் எச்சரித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com