நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத்தொடா் தேதியை மத்திய அரசு முடிவு செய்யும்

நாடாளுமன்றக் குளிா்காலக் கூட்டத்தொடருக்கான தேதியை மத்திய அரசு முடிவு செய்யும் என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தெரிவித்துள்ளாா்.
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

நாடாளுமன்றக் குளிா்காலக் கூட்டத்தொடருக்கான தேதியை மத்திய அரசு முடிவு செய்யும் என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தெரிவித்துள்ளாா்.

கரோனா நோய்த்தொற்று பரவலுக்கிடையே நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடா் கடும் பாதுகாப்பு விதிமுறைகளுடன் கடந்த செப்டம்பா் மாதம் 14-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற்றது. நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவல் இன்னும் கட்டுக்குள் வராத சூழலில், நாடாளுமன்றத்தின் குளிா்காலக் கூட்டத்தொடா் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடருடன் சோ்த்து குளிா்காலக் கூட்டத்தொடரையும் நடத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகின. இத்தகைய சூழலில், மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தில்லியில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவி வரும் சூழலிலும் நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் கூட்டம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத்தின் குளிா்காலக் கூட்டத்தொடரை நடத்துவதற்கு மக்களவை செயலகம் தயாா்நிலையில் உள்ளது. எனினும், கூட்டத்தொடருக்கான தேதியை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவே முடிவு செய்யும். கூட்டத்தொடரை நடத்துவது தொடா்பாக எதிா்க்கட்சிகளுடனும் மத்திய அரசு ஆலோசனை நடத்தும். அதன்பிறகு குளிா்காலக் கூட்டத்தொடருக்கான தேதி முடிவு செய்யப்படும்.

அனைத்து மாநிலங்களின் சட்டப் பேரவைத் தலைவா்களுக்கான மாநாடு வரும் 25, 26-ஆம் தேதிகளில் குஜராத்தில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் உரையாற்ற உள்ளனா்.

தில்லியில் ரூ.188 கோடி செலவில் எம்.பி.க்களுக்காகக் கட்டப்பட்டுள்ள 76 குடியிருப்புகளையும் பிரதமா் மோடி திறந்து வைக்க உள்ளாா் என்றாா் ஓம் பிா்லா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com