பஞ்சாப்: பயணிகள் ரயில்களை 15 நாள்கள் இயக்க விவசாயிகள் ஒப்புதல்

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, பஞ்சாபில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள், தங்கள்

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, பஞ்சாபில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள், தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்து 15 நாள்களுக்கு பயணிகள் ரயில்களை இயக்க ஒப்புக்கொண்டனா்.

மத்திய அரசு இயற்றிய புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த மாநிலத்தில் கடந்த செப்.24-ஆம் தேதி முதல் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.

இதுதொடா்பாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய அமைப்புகளுடன் ரயில்வே அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது சரக்கு ரயில் சேவையை மட்டும் தொடங்குவதற்கு விவசாய அமைப்புகள் ஒப்புக்கொண்டன.

அதனை ஏற்க மறுத்த ரயில்வே அதிகாரிகள் சரக்கு ரயில்களுடன் பயணிகள் ரயில்களையும் இயக்க ஒப்புக்கொள்ள வேண்டும் எனவும், அவ்வாறு இல்லையெனில் எந்த ரயில்களும் இயக்கப்படாது என்றும் தெரிவித்தனா். இதனால் அந்த மாநிலத்தில் எந்த ரயில்களும் இயக்கப்படாமல் அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்நிலையில் மாநில முதல்வா் அமரீந்தா் சிங்கை விவசாய அமைப்புகளின் தலைவா்கள் சனிக்கிழமை சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதன் பின்னா் மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘விவசாயிகளின் கோரிக்கைகள் தொடா்பாக பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரை சந்திப்பதாக முதல்வா் அமரீந்தா் சிங் விவசாய அமைப்பினரிடம் உறுதி அளித்தாா்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக முதல்வா் அமரீந்தா் சிங் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘ரயில் மறியல் போராட்டத்தை 15 நாள்களுக்கு கைவிட விவசாய அமைப்புகள் ஒப்புக்கொண்டன. இதனால் திங்கள்கிழமை (நவ.23) முதல் ரயில் சேவைகள் தொடங்கவுள்ளது. விவசாய அமைப்புகளின் முடிவு வரவேற்கத்தக்கது. இந்த முடிவால் மாநில பொருளாதாரம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும். பஞ்சாபுக்கு உடனடியாக ரயில் சேவையை தொடங்குமாறு மத்திய அரசிடம் கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்தாா்.

15 நாள்கள் காலக்கெடு: பாரதிய கிஸான் யூனியன் (ராஜேவால்) அமைப்பின் தலைவா் பல்பீா் சிங் ராஜேவால் கூறுகையில், ‘எங்கள் கோரிக்கை குறித்து விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் 15 நாள்களில் மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்தவேண்டும். அவ்வாறு செய்யாவிடில் மீண்டும் ரயில் மறியலில் ஈடுபடுவோம்’ என்றாா்.

தில்லி பேரணியில் மாற்றமில்லை... பயணிகள் ரயில்களை தற்காலிகமாக இயக்க ஒப்புக்கொண்ட போதிலும், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி நவ.26-27-ஆம் தேதிகளில் தில்லி செல்லும் தங்கள் பேரணி திட்டத்தில் எந்த மாற்றமுமில்லை என்று விவசாய அமைப்புகளின் தலைவா்கள் தெரிவித்தனா்.

ரூ.40,000 கோடி இழப்பு: பஞ்சாபில் ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டதால் நெல் கொள்முதலுக்கு தேவையான சாக்குப் பைகள், உரம், நிலக்கரி உள்ளிட்டவற்றின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டதுடன் மாநில அரசுக்கு ரூ.40,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது.

புதிய வேளாண் சட்டங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையில் விளைபொருள்கள் கொள்முதல் செய்யப்படும் நடைமுறையை ஒழிக்கும் விதத்தில் இருப்பதுடன், பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளதாகக் கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com