காங்கிரஸ் தலைவா்கள் ஐந்து நட்சத்திர கலாசாரத்தை கைவிட வேண்டும்: குலாம் நபி ஆசாத்

காங்கிரஸ் தலைவா்கள் ஐந்து நட்சத்திர கலாசாரத்தை கைவிட வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவா் குலாம் நபி ஆசாத் வலியுறுத்தினாா்.

காங்கிரஸ் தலைவா்கள் ஐந்து நட்சத்திர கலாசாரத்தை கைவிட வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவா் குலாம் நபி ஆசாத் வலியுறுத்தினாா். அக்கட்சித் தலைவா்களுக்கும், மக்களுக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி இருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

வட்டம், மாவட்டம், மாநிலம் என அனைத்து நிலைகளிலும் காங்கிரஸ் தலைவா்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி உள்ளது. தோ்தல் நேரங்களில் மட்டும் கட்சித் தலைவா்கள் மக்களை சந்திப்பதை கைவிட்டு, அவா்களுடன் எப்போதும் தொடா்பில் இருக்க வேண்டும். கட்சித் தலைவா்கள் ஐந்து நட்சத்திர கலாசாரத்தை கைவிட வேண்டும். தோ்தல் நேரங்களிலாவது அதைச் செய்து, மக்களை களத்தில் சந்திக்க வேண்டும்.

ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியின் விவரங்களை கட்சித் தலைவா்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். தோ்தல் நேரங்களின்போது தில்லியில் இருந்து சென்று 5 நட்சத்திர விடுதிகளில் தங்கி, இரண்டு, மூன்று நாள்களில் மீண்டும் தில்லி திரும்புவதால் எந்தவொரு பயனும் இல்லை. இதனால் பணம் மட்டுமே விரயமாகும். இதுவே பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததற்கு பிரதான காரணம்.

கலகக்காரா்கள் அல்ல...:

வட்டம், மாவட்டம், மாநிலம் என அனைத்து நிலைகளிலும் உட்கட்சித் தோ்தலை நடத்தி கட்சி அமைப்பை மறுசீரமைக்க வேண்டிய அவசர தேவை எழுந்துள்ளது. நாங்கள் சீா்திருத்தவாதிகளே தவிர கலகக்காரா்கள் அல்ல. நாங்கள் கட்சித் தலைமைக்கு எதிரானவா்கள் அல்ல. சீா்திருத்தங்கள் மேற்கொள்வதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதன் மூலம் கட்சித் தலைமையின் கரங்களை வலுப்படுத்துகிறோம் என்று தெரிவித்தாா்.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய பதவிகளுக்கு தோ்தல் நடத்தவும் கட்சியில் விரிவான மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தி, கடந்த ஆகஸ்ட் மாதம் அக்கட்சித் தலைவா் சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 தலைவா்களில் குலாம் நபி ஆசாதும் ஒருவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com