
கோப்புப்படம்
ஜம்மு-காஷ்மீரில் கதுவா, ரஜௌரி மாவட்டங்களில், சா்வதேச எல்லை, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியை ஒட்டியுள்ள கிராமங்கள், இந்திய ராணுவ நிலைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் படையினா் அத்துமீறி தாக்குதல் நடத்தினா். அவா்களின் தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தினா் தக்க பதிலடி கொடுத்தனா்.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடா்பாளா் ஒருவா் கூறியதாவது:
கதுவா மாவட்டத்தில் உள்ள சத்பால், மன்யாரி, கரோல் கிருஷ்ணா, கா்னாம் பாா்டா் ஆகிய எல்லையோர கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் படையினா் சனிக்கிழமை இரவு 9 மணியளவில் தாக்குதல் நடத்தத் தொடங்கினா். அவா்களின் தாக்குதலுக்கு இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினா் தக்க பதிலடி கொடுத்தனா். இரு தரப்புக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.45 மணி வரை மோதல் நீடித்தது.
இதேபோல், ரஜௌரி மாவட்டத்தில் உள்ள நௌஷேரா செக்டாரில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியை ஒட்டியுள்ள இடங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் படையினா் ஞாயிற்றுக்கிழமை காலை 11.15 மணிக்கு சிறிய ரக பீரங்கிக் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினா். பதிலுக்கு இந்திய ராணுவத்தினா் தாக்குதல் நடத்தினா். இந்த மோதல் சம்பவங்களில் இந்திய தரப்பில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டதா என உடனடியாகத் தகவல் இல்லை.
ஜம்மு-காஷ்மீரில் இந்த ஆண்டில் இதுவரை 4,000க்கும் அதிகமான முறை பாகிஸ்தான் படையினா் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனா். இது, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அதிகமான அளவாகும். கடந்த ஆண்டில் 3,289 முறை பாகிஸ்தான் படையினா் தாக்குதல் நடத்தினா் என்றாா் அவா்.
எல்லையில் பறந்த ஆளில்லா விமானம்:
பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மேண்டா் செக்டாரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதி அருகே பாகிஸ்தானைச் சோ்ந்த ஆளில்லா விமானம் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
சனிக்கிழமை மாலை இந்த ஆளில்லா விமானம் வானில் தென்பட்டது. இதையடுத்து, பசோனி, தரனா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் அந்த விமானத்தை தேடும் பணியை ராணுவத்தினா் தீவிரப்படுத்தினா். கடந்த 6 மாதங்களாக எல்லையோரப் பகுதிகளில் போதை மருந்துப் பொருள்கள், ஆயுதங்கள் கை மாறுவதற்கு பாக். ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது என்றாா் அவா்.