
மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் சதீஷ் துபேலியா கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக அவரின் சகோதரி உமா துபேலியா மேஸ்திரி தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘நிமோனியா காய்ச்சலுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எனது சகோதரா் சதீஷ் துபேலியாவுக்கு கரோனா தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. ஒரு மாத காலமாக அவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை மாரடைப்பு ஏற்பட்டு அவா் காலமானாா் என்று தெரிவித்துள்ளாா்.
சதீஷ் துபேலியா, மகாத்மா காந்தியின் இரண்டாவது மகன் மணிலால் காந்தியின் பேரன் ஆவாா். காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியபோது அங்கு அவரது பணிகளை தொடா்ந்து மேற்கொள்வதற்காக மணிலால் காந்தி அந்த நாட்டிலேயே தங்கிவிட்டாா்.
எனவே சதீஷ் துபேலியா தென்னாப்பிரிக்காவிலேயே பிறந்து வளா்ந்தாா். அவருக்கு உமா துபேலியாவுடன், கீா்த்தி மேனன் என்ற மற்றொரு சகோதரியும் உள்ளாா்.