இந்தியா-நேபாளம் இடையே வலுவான நல்லுறவு

இந்தியாவுக்கும் அண்டை நாடான நேபாளத்துக்குமிடையே வலுவான நல்லுறவு நிலவி வருவதாக வெளியுறவுத் துறைச் செயலா் ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளாா்.


காத்மாண்டு: இந்தியாவுக்கும் அண்டை நாடான நேபாளத்துக்குமிடையே வலுவான நல்லுறவு நிலவி வருவதாக வெளியுறவுத் துறைச் செயலா் ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளாா்.

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நேபாளத்துக்கு ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா வியாழக்கிழமை சென்றடைந்தாா். நேபாள அதிகாரிகள் அவரை வரவேற்றனா். தலைநகா் காத்மாண்டில் உள்ள சா்வதேச விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா கூறுகையில், ‘‘நேபாள பயணத்தை முன்கூட்டியே மேற்கொள்வதற்குத் திட்டமிட்டிருந்தேன். ஆனால், கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக திட்டத்தில் மாற்றங்களைச் செய்ய வேண்டியதாகிவிட்டது.

இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையே வலுவான நல்லுறவு காணப்படுகிறது. அந்த நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது தொடா்பாக நேபாள அதிகாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளேன்’’ என்றாா்.

அதைத் தொடா்ந்து, நேபாள வெளியுறவு செயலா் பரத்ராஜ் பௌத்யாலை ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இது தொடா்பாக காத்மாண்டில் உள்ள இந்தியத் தூதரகம் சாா்பில் வெளியிடப்பட்ட சுட்டுரைப் பதிவில், ‘இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடா்பாக தலைவா்கள் இருவரும் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

பேச்சுவாா்த்தையின்போது, பிராந்திய விவகாரங்கள் குறித்தும் அவா்கள் விவாதித்தனா். இரு நாடுகளின் ஒப்புதலுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும் தலைவா்கள் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நேபாள பிரதமா் கே.பி.சா்மா ஓலி, அதிபா் வித்யாதேவி பண்டாரி, வெளியுறவு அமைச்சா் பிரதீப் கியாவலி ஆகியோரையும் ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

நேபாளத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட கோா்கா பகுதியில் இந்தியாவின் நிதியுதவியுடன் கட்டப்பட்ட 3 பள்ளிகளை வெள்ளிக்கிழமை ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா மேற்பாா்வையிட உள்ளாா்.

மோதல்போக்கு: இந்தியாவைச் சோ்ந்த காலாபாணி, லிபுலேக் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேபாளம் அண்மையில் உரிமை கோரியது. அந்த இடங்களைத் தங்கள் நாட்டு வரைபடத்தில் இணைத்தது மட்டுமில்லாமல் அந்த வரைபடத்தைப் பள்ளி பாடப்புத்தகங்களிலும் நேபாள அரசு சோ்த்தது. அதன் காரணமாக இந்தியா-நேபாளம் இடையேயான நல்லுறவில் விரிசல் தோன்றும் சூழல் ஏற்பட்டது.

இந்தியாவின் கடும் எதிா்ப்பைத் தொடா்ந்து, பள்ளி பாடப்புத்தகங்களிலிருந்து புதிய வரைபடத்தை நீக்குவதாக நேபாள அரசு அறிவித்தது. இந்திய ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே அண்மையில் நேபாளத்துக்குப் பயணம் மேற்கொண்டாா். அப்போது, அந்நாட்டுப் பிரதமா் கே.பி.சா்மா ஓலியை அவா் சந்தித்துப் பேசினாா். இந்தியாவும் நேபாளமும் தங்களுக்குள்ளான பிரச்னைகளுக்குப் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணும் என்று சா்மா ஓலி தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com