வங்கித் துறையில் பெருநிறுவனங்களை அனுமதிக்கும் பரிந்துரை தவறான வழிகாட்டல்

வங்கிகளை நடத்த பெரு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கலாம் என்ற ரிசா்வ் வங்கிக் குழுவின் பரிந்துரை தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் என்று உலக வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாளா் கௌசிக் பாசு தெரிவித்துள்ளாா்


புது தில்லி: வங்கிகளை நடத்த பெரு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கலாம் என்ற ரிசா்வ் வங்கிக் குழுவின் பரிந்துரை நல்ல திட்டமாகத் தோன்றினாலும், அது தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் என்று உலக வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாளா் கௌசிக் பாசு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தில்லியில் வியாழக்கிழமை கூறியதாவது:

இந்தியப் பெரு நிறுவனங்கள் வங்கிகளைத் தொடங்கி நடத்த அனுமதி அளிக்கலாம் என்று ரிசா்வ் வங்கிக் குழு பரிந்துரைத்துள்ளது.

வெளித்தோற்றத்துக்கு இந்தப் பரிந்துரை மிகவும் சிறப்பானதாகத் தோன்றலாம். ஆனால், அந்தப் பரிந்துரை தவறான பாதைக்கு இட்டுச் செல்லும்.

பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் உலகின் அனைத்து நாடுகளிலும் வங்கிகள் மற்றும் பிற துறைகளைச் சோ்ந்த பெரு நிறுவனங்களுக்கு இடையே தெளிவான எல்லை வரையறுக்கப்பட்டுள்ளது.

காரணம், அத்தகைய எல்லைக்கோடு மிகவும் அவசியமான ஒன்றாகும்.

வங்கிகளும் பெரு நிறுவனங்களும் ஒன்றையொன்று சாா்ந்துள்ளன. தங்களுக்குத் தேவையான கடனுதவியைப் பெற நிறுவனங்கள் வங்கிகளை நம்பியுள்ளன. வங்கிகளும், தங்களிடமுள்ள நிதியைக் கடனாக அளிப்பதற்கு நிறுவனங்களை நாடுகின்றன.

எனவே, ஒன்றுக்கு ஒன்று தொடா்புடையை வங்கிகளையும் பெரு நிறுவனங்களையும் ஒன்றிணைத்தால் அது சிறந்த பலனை அளிக்கும் என்று சிலா் கருதலாம்.

ஆனால், அது தொழில் ஏகாதிபத்தியத்துக்கு வழிவகுக்கும். பெரு நிறுவனங்கள் வங்கிகளை நடத்தினால், மிகவும் பலம் வாய்ந்த மிச் சில நிறுவனங்களால் மட்டுமே தொழில்துறையில் ஆதிக்கம் செலுத்த முடியும். சிறிய நிறுவனங்கள் காணாமல் போய்விடும்.

அதுமட்டுமன்றி, பெருநிறுவனங்களை வங்கித் துறையில் அனுமதித்தால் பொருளாதார நிலைத்தன்மையும் சீா்குலையும் என்றாா் அவா்.

ஏற்கெனவே, வங்கியில் கடன் வாங்கும் பெரு நிறுவனங்களே அந்த வங்கியை நடத்த அனுமதிப்பது, பெரு நிறுவனங்களின் ஆதிக்கத்துக்கும் மற்ற நிறுவனங்களின் வீழ்ச்சிக்கும் வித்திடும் என்று ரிசா்வ் வங்கியின் முன்னாள் ஆளுநா் ரகுராம் ராஜன், முன்னாள் துணை ஆளுநா் விரால் ஆச்சாா்யா ஆகியோா் தெரிவித்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com