விவசாயிகள் மீது தண்ணீர் பீய்ச்சுவதை நிறுத்திய இளைஞர் மீது கொலை முயற்சி வழக்கு

வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்த காவல்துறையின் தண்ணீர் வாகனத்தின் மீது லாவகமாக ஏறி, அதனை நிறுத்திய இளம் விவசாயி மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்
விவசாயிகள் மீது தண்ணீர் பீய்ச்சுவதை நிறுத்திய இளைஞர் மீது கொலை முயற்சி வழக்கு
விவசாயிகள் மீது தண்ணீர் பீய்ச்சுவதை நிறுத்திய இளைஞர் மீது கொலை முயற்சி வழக்கு


சண்டிகர்: வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்த காவல்துறையின் தண்ணீர் வாகனத்தின் மீது லாவகமாக ஏறி, அதனை நிறுத்திய இளம் விவசாயி மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளாலும், சமூக ஊடகவியலாளர்களாலும் நாயகனாகக் கொண்டாடப்பட்டவர் 26 வயதாகும் விவசாயி நவ்தீப் சிங். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்து காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது, காவல்துறையின் தடுப்புகளை எல்லாம் இடித்துத் தள்ளிவிட்டு, தனது டிராக்டரில் சென்று, தண்ணீர் டேங்கர் மீது ஏறி, மிக வேகமாக தண்ணீர் பீய்ச்சிக் கொண்டிருந்த அந்த இயந்திரத்தை நிறுத்தினார்.

இந்த விடியோவும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் மிக அதிகமானோரால் பகிரப்பட்டது.

தில்லி நோக்கி விவசாயிகள் வந்து கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நவம்பர் 25-ம் தேதி நடந்துள்ளது. இதையடுத்து, நவ்தீப் மற்றும் பாரதிய விவசாய மாநில சங்கத் தலைவர் குர்நாம் சிங் மீதும் ஹரியாணா காவல்துறையினர் கொலை முயற்சி வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.

காவல்துறையினரின் தடுப்புகளை இடித்துக் தள்ளிக் கொண்டு, காவலர் மீது டிராக்டரை விட்டு மோதச் செய்வது போல வந்ததால் நவ்தீப் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

2015-ஆம் ஆண்டு குருக்ஷேத்ரா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு, விவசாயியும், சமூக ஆர்வலருமான தனது தந்தை ஜெய் சிங்குடன் இணைந்து நவ்தீப் சிங் விவசாயம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com