வலுக்கும் போராட்டம்: தில்லி நோக்கி மேலும் 2 லட்சம் விவசாயிகள்

வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மேலும் 2 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தில்லி நோக்கி படையெடுத்துள்ளனர்.
வலுக்கும் போராட்டம்: தில்லி நோக்கி படையெடுத்துள்ள 2 லட்சம் விவசாயிகள்
வலுக்கும் போராட்டம்: தில்லி நோக்கி படையெடுத்துள்ள 2 லட்சம் விவசாயிகள்

வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மேலும் 2 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தில்லி நோக்கி படையெடுத்துள்ளனர்.

தில்லியின் புராரி திடலில் நடைபெற்று வரும் போராட்டத்தில் இன்று அவர்கள் பங்கேற்கவுள்ளனர். 

போராட்டக்காரர்களுக்கு தேவையான காய்கறி உள்ளிட்ட உணவுப்பொருள்களுடன் பஞ்சாபிலிருந்து புறப்பட்ட விவசாயிகள், இரவில் ஹரியாணாவில்  தங்கி தற்போது தில்லி நோக்கி புறப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பஞ்சாபிலிருந்து ஹரியாணா வழியாக தில்லி அடையும் விவசாயிகளின் பேரணியை கடந்த வியாழக்கிழமை பஞ்சாப் - ஹரியாணா எல்லையில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

தடுப்புகளை அமைத்தும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் விவசாயிகளை கலைத்தனர். எனினும் காவல்துறையினரின் தடுப்புகளை மீறி விவசாயிகள் தில்லி நோக்கி முன்னேறினர்.

இதனிடையே விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் வலியுறுத்தியதைத் தொடர்ந்து தில்லியில் நுழைவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. 

பின்னர் புராரியின் நிரங்கரி சமகம் திடலில் அமைதியான வழியில் போராட்டத்தை நடத்திக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விவசாயிகளை தில்லியினுள் அனுமதித்தனர்.

காவல்துறையினர் அளித்த தகவலின்படி புராரி திடலில் பாரதிய கிசான் யூனியனைச் சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் என 1.5 லட்சம் முதல் 2 லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் அதிக அளவில் சங்ரூர், பதிந்தா மற்றும் பர்னாலா பகுதியைச் சேர்ந்தவர் பங்கேற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கிசான் சங்கர்ஷ் குழுவைச் சேர்ந்த விவசாயிகளும் நேற்று (வெள்ளிக்கிழமை) அமிர்தசரஸ் பகுதியிலிருந்து ஹரியாணா வழியாக தில்லி நோக்கி புறப்பட்டுள்ளனர். இரவில் ஹரியாணாவில் தங்கியிருந்த நிலையில், அவர்கள் இன்று தில்லி போராட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு தேவையான உணவுப் பொருள்களுடன், டிராக்டர், பேருந்து, இருசக்கர வாகனங்களில் 40 கிலோமீட்டர் தூரத்திற்கு விவசாயிகள் படையெடுத்துள்ளனர். 

இது குறித்து கிசான் சங்கர்ஷ் குழுவின் பொதுச்செயலாளர் சர்வான் சிங், 
அமிர்தசரஸ், படாலா மற்றும் குர்தாஸ்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தில்லி நோக்கி வந்துகொண்டிருப்பதாகக் கூறினார். 

தில்லி நோக்கிய விவசாயிகளின் வாகன அணிவகுப்பை பாரதிய கிஷான் யூனியனை சேர்ந்த இளைஞர்கள் வழிநடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com