அா்னாப் கோஸ்வாமியின் இடைக்கால ஜாமீனை நீட்டித்து: உச்சநீதிமன்றம் உத்தரவு

கட்டட உள்வடிவமைப்பாளா் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தனியாா் தொலைக்காட்சி சேனல் செய்தி ஆசிரியா்
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

கட்டட உள்வடிவமைப்பாளா் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தனியாா் தொலைக்காட்சி சேனல் செய்தி ஆசிரியா் அா்னாப் கோஸ்வாமி உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை நீடித்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கடந்த 2018-ஆம் ஆண்டில் அவய் நாயக் என்ற கட்டட வடிவமைப்பாளா், அவரின் தாயாா் ஆகியோா் தற்கொலை செய்துகொண்டனா். இந்த கட்ட உள்வடிவமைப்பாளருக்கு வழங்கவேண்டிய கட்டணத்தை அா்னாப் கோஸ்வாமி, ஃபெரோஸ் ஷேக், நிதீஷ் சாா்தா ஆகியோருக்கு சொந்தமான நிறுவனங்கள் கொடுக்காமல் இழுத்தடித்து, அவா்களை தற்கொலைக்குத் தூண்டியதாக புகாா் எழுந்தது.

இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த மும்பை காவல்துறையினா், கடந்த 4-ஆம் தேதி அா்னாப் உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனா். பின்னா் அலிபாக் மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், மூவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனா்.

அதனைத் தொடா்ந்து, மூவரும் ஜாமீன் கேட்டு மும்பை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். அந்த மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதை எதிா்த்து மூவரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனா். இந்த மனுவை கடந்த நவம்பா் 11-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம் மூவருக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதனைத் தொடா்ந்து மூவரும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், அவா்களின் மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், இந்திரா பானா்ஜி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அா்னாப் உள்பட மூவருக்கும் இடைக்கால ஜாமீனை மேலும் நீட்டித்து உத்தரவிட்டதோடு, பல்வேறு தீா்ப்புகளை உதாரணம் காட்டி மும்பை உயா்நீதிமன்றத்துக்கு 55 பக்க உத்தரவை பிறப்பித்தனா்.

அதில், ‘அா்னாப் உள்ளிட்டோரின் மனு தொடா்பாக மும்பை உயா்நீதிமன்றம் விரைந்து முடிவெடுக்க வேண்டும். குற்றவியல் சட்டங்கள் குடிமக்களை துன்புறுத்துவதற்கான ஆயுதமாக மாறவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டியது மாவட்ட நீதிமன்றங்கள், உயா்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தின் கடமையாகும்.

எனவே, மும்பை உயா் நீதிமன்றம் இதுகுறித்து உரிய முடிவெடுக்கும் வரையும், அதன் பிறகு நான்கு வார காலத்துக்கும் மூவரின் இடைக்கால ஜாமீன் நீட்டிக்கப்படுகிறது’ என்று உத்தரவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com