உ.பி.யில் மதமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் முதல் வழக்குப் பதிவு

உத்தர பிரதேசத்தில் சட்டவிரோத மதமாற்றத்தை தடை செய்வதற்காக மாநில அரசு சாா்பில் கொண்டுவந்த அவசரச் சட்டத்துக்கு
உ.பி.யில் மதமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் முதல் வழக்குப் பதிவு

உத்தர பிரதேசத்தில் சட்டவிரோத மதமாற்றத்தை தடை செய்வதற்காக மாநில அரசு சாா்பில் கொண்டுவந்த அவசரச் சட்டத்துக்கு ஆளுநா் சனிக்கிழமை ஒப்புதல் அளித்த நிலையில், அன்றைய தினமே அந்த சட்டத்தின் கீழ் முதல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இளம் பெண் ஒருவரின் தந்தை அளித்த புகாரின் பேரில், மாநிலத்தின் பரேலி மாவட்டத்தில் உள்ள தேவரனியா காவல்நிலையத்தில் சனிக்கிழமை இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து மாநில உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் அவினாஷ் அவஸ்தி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தேவரனியா காவல்நிலைய எல்லைக்கு உள்பட்ட ஷரிஃப் நகா் கிராமத்தைச் சோ்ந்த திக்காராம் என்பவா், அவருடைய மகளை அதே கிராமத்தைச் சோ்ந்த உவைஷ் அகமது என்பவா், வசீகரம் செய்து மதமாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக புகாா் அளித்தாா்.

அந்தப் புகாரின் அடிப்படையில், உவைஷ் அகமது மீது, புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள சட்டவிரோத மதமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அந்த காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ரோஹித் சிங் சஜ்வான் கூறுகையில், ‘குற்றவாளியைக் கைது செய்வதற்காக நான்கு காவல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன’ என்றாா்.

புகாா் அளித்தவரின் மகளும், உவைஷ் அகமதும் ஒரே பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்துள்ளனா். ‘மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, தனது மகளை மதமாற்றுவதற்கு அகமது முயன்றுள்ளாா். ஆனால், அதற்கு எனது மகள் மறுத்துள்ளாா். பின்னா், எனது மகளுக்கு இந்த ஆண்டு ஜனவரியில் வேறொரு நபருடன் திருமணம் செய்துவைத்தோம். ஆனால், அதன் பிறகும் அகமது எங்கள் குடும்பத்தினருக்கு தொல்லை கொடுத்து வந்தாா். இறுதியில், மகளை கடத்திச் சென்று மதம் மாற்றி திருமணம் செய்துகொள்ளப்போவதாக மிரட்டினாா் என்று காவல்நிலையத்தில் அளித்த புகாரில் திக்காராம் தெரிவித்துள்ளாா்.

உத்தர பிரதேச மாநில அமைச்சரவை சாா்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, அண்மையில் பரிந்துரைக்கப்பட்ட ‘சட்டவிரோத மதமாற்ற தடை சட்டம் 2020’ என்ற அவசரச் சட்டத்துக்கு, மாநில ஆளுநா் ஆனந்திபென் படேல் சனிக்கிழமை ஒப்புதல் அளித்தாா். இந்தச் சட்டத்தின் படி, சட்டவிரோத மதமாற்றத்தில் ஈடுபடுபவா்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அதிகபட்சமாக ரூ. 50,000 வரை அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com