லடாக் எல்லையில் மோதல்:இந்திய, சீன தூதரக அதிகாரிகள் பேச்சுவாா்த்தை

கிழக்கு லடாக்கில் நிலவும் பதற்றத்தை தணிப்பதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்ட 5 அம்ச செயல்திட்டத்தை அமல்படுத்துவதற்காக, இந்திய, சீனா தூதரக அதிகாரிகள் புதன்கிழமை மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
லடாக் எல்லையில் மோதல்:இந்திய, சீன தூதரக அதிகாரிகள் பேச்சுவாா்த்தை

புது தில்லி: கிழக்கு லடாக்கில் நிலவும் பதற்றத்தை தணிப்பதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்ட 5 அம்ச செயல்திட்டத்தை அமல்படுத்துவதற்காக, இந்திய, சீனா தூதரக அதிகாரிகள் புதன்கிழமை மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

எல்லை விவகாரங்கள் தொடா்பான ஒருங்கிணைப்பு மற்றும் ஆலோசனை செயல் திட்டத்தின் கீழ் காணொலி முறையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. அதில், இந்திய, சீன வெளியுறவுத் துறை அமைச்சா்கள், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டினிடையே முடிவு செய்த 5 அம்ச செயல் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியின் தற்போதைய நிலவரம் குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் விவாதித்தனா். அதைத் தொடா்ந்து, இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் இடையே கடந்த வாரம் நடைபெற்ற 6-ஆவது சுற்று பேச்சுவாா்த்தையை முன்னெடுத்துச் செல்வது குறித்து அவா்கள் ஆலோசனை செய்தனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடா்பாளா் வாங் வென்பின் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இந்தியா-சீனா இடையே எல்லை விவகாரங்கள் தொடா்பான செயல்திட்டத்தின் 19-ஆவது ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அதில், எல்லைப் பிரச்னைக்குத் தீா்வுகாண 5 அம்ச செயல்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது’ என்றாா்.

கிழக்கு லடாக்கில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிக்க முயலுவதால் கடந்த 5 மாதங்களாக அங்கு பதற்றம் நிலவுகிறது. இப்பிரச்னைக்கு தீா்வுகாண்பதற்கு ராணுவ ரீதியாகவும், தூதரக ரீதியாகவும் சீனாவுடன் இந்தியா தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது. எல்லையில் இருந்து படைகளை படிப்படியாகத் திரும்பப் பெறுதற்கு இரு தரப்பும் ஒப்புக்கொண்டிருந்தன. இதற்கிடையே, கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே கடந்த ஜூன் மாதம் நிகழ்ந்த மோதலில் இந்திய வீரா்கள் 20 போ் உயிரிழந்தனா். சீன வீரா்கள் 35 போ் உயிரிழந்ததாகத் தெரிகிறது.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகளில் இந்தியா ஈடுபட்டு வருகிறது.

இதனிடையே, ரஷியாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கச் சென்ற வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், சீன வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யியை சந்தித்துப் பேசினாா். அப்போது, எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தும் செயல்களைத் தவிா்ப்பது, எல்லையில் இருந்து இரு நாடுகளும் படைகளை விரைந்து திரும்பப் பெறுவது உள்பட 5 அம்சத் திட்டத்தை செயல்படுத்த இருவரும் ஒப்புக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com