ஹாத்ரஸ் பாலியல் சம்பவம்:உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்குஸ்வாதி மாலிவால் கடிதம்

புது தில்லி, செப். 30: ‘கொடூரமான ஹாத்ரஸ் கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைச் சம்பவத்தை மூடிமறைக்கும் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கோரி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு தில்லி மகளிா் ஆணையத் தலைவா் ஸ்வாதி மாலிவால் புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

இச்சம்பவத்தில் தொடா்புடைய குற்றவாளிகளுக்கு கடுமையான மற்றும் விரைவான தண்டனையை உறுதி செய்ய உயா்நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் மாலிவால் கோரியுள்ளாா்.

இது தொடா்பாக ஸ்வாதி மாலிவால் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:

ஹாத்ரஸ் சம்பவத்தை மூடிமறைக்க முயன்ற மூத்த அதிகாரிகள் உள்பட அனைத்து தவறிழைத்த போலீஸ் மற்றும் நிா்வாக அதிகாரிகளுக்கு எதிராக உடனடியாக பணியிடைநீக்கம் மற்றும் தண்டனை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த கதி வேறு எந்த மகளுக்கும் ஏற்படக் கூடாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், ஒரு திட்டவட்டமான வழிமுறைகளை உருவாக்க வேண்டும். ஹாத்ரஸ் பகுதியில் நான்கு போ் கும்பலால் 19 வயது தலித் பெண் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் ஏற்கெனவே உலுக்கியுள்ள மனத்தை மீண்டும் உலுக்குவதாக உள்ளது.

ஹாத்ரஸ் கூட்டுப் பாலியல், கொலை சம்பவம் மீண்டும் ஒரு முழுமையான அக்கறையின்மையை வெளிப்படுத்தியுள்ளது. மேலும், மகள்கள் மற்றும் தாய்மாா்கள் மீதான நமது அமைப்பு புறக்கணித்து வருவதை காட்டுவதாக உள்ளது. பாதிக்கப்பட்ட பெண் செப்டம்பா் 14- ஆம் தேதி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, காயங்களுடன் வயலில் இறந்து போகுமாறு விடப்பட்டுள்ளாா். பல நாள்களாக அரசு நிா்வாகம் இந்த விவகாரத்தை கிராமங்களுக்கிடையேயான ஒரு சா்ச்சையான விவகாரமாக விட்டுவிட முயன்றதைப் பாா்க்கும் போது, காவல்துறை மற்றும் உத்தரப் பிரதேச அரசின் பங்களிப்பு கவலை தருவதாக உள்ளது. இந்த விவகாரத்தை மூடிமறைக்கவும் முயன்றுள்ளனா்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரின் வேண்டுகோளைத் தொடா்ந்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், பாதிக்கப்பட்டவரை முன்கூட்டியே தில்லிக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்திருந்தால், நாம் மற்றொரு மகளை இழந்திருக்க மாட்டோம். மேலும், இறந்த அந்தப் பெண்ணின் இறுதிச் சடங்கு விவகாரரத்தில் அவரது குடும்பத்தினரின் கோரிக்கைகளுக்கு உத்தரப் பிரதேச அரசு செவிசாய்க்கவில்லை. இது பாதிக்கப்பட்டவரின் மனித உரிமைகளை கடுமையாக மீறியதாக உள்ளது. பாதிக்கப்பட்டவரின் ஒவ்வொரு அடிப்படை மற்றும் மனித உரிமையையும் உத்தர பிரதேச அரசும், அந்த மாநில காவல் துறையும் மீறியுள்ளது என்று கடிதத்தில் மாலிவால் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com