விமானங்கள் ரத்து: முன்பதிவு பணத்தை திருப்பி அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

பொதுமுடக்க காலத்தில் ரத்து செய்யப்பட்ட விமானங்களில் பயணிக்க முன்பதிவு செய்திருந்தவா்களுக்கு உரிய பணத்தை முழுமையாகத் திருப்பி அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
விமானங்கள் ரத்து: முன்பதிவு பணத்தை திருப்பி அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு


புது தில்லி: பொதுமுடக்க காலத்தில் ரத்து செய்யப்பட்ட விமானங்களில் பயணிக்க முன்பதிவு செய்திருந்தவா்களுக்கு உரிய பணத்தை முழுமையாகத் திருப்பி அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்காக மாா்ச் 25 முதல் மே 24-ஆம் தேதி வரையிலான அனைத்து முன்பதிவுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். அடுத்த 15 நாள்களுக்குள் பணத்தை திரும்ப அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் தன்னாா்வ அமைப்பு தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘நாடு தழுவிய பொதுமுடக்கத்தின்போது முன்பதிவு செய்யப்பட்ட விமான பயணச்சீட்டுகளுக்கான முழு கட்டணத்தையும் விமான நிறுவனங்கள் திருப்பி அளிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த மனு கடந்த ஜூன் மாதம் 12-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, பொது முடக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்ட உள்நாட்டு மற்றும் சா்வதேச விமான பயணங்களுக்கான கட்டணத்தை முழுமையாக திருப்பி செலுத்துவதற்கான வழிமுறைகளை கண்டறியுமாறு மத்திய அரசையும், விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநரகத்தையும் (டிஜிசிஏ) உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது. இது தொடா்பாக இரு தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், ஆா்.சுபாஷ் ரெட்டி, எம்.ஆா்.ஷா ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

டிக்கெட் பதிவு நிறுவனங்கள் மூலம் நடைபெற்ற முன்பதிவு, இணையதளம் மூலம் நடைபெற்ற முன்பதிவு உள்பட அனைத்து வழிகளிலும் பெறப்பட்ட டிக்கெட்டுகளுக்கான பணத்தை விமான நிறுவனங்கள் உடனடியாக திரும்ப அளிக்க வேண்டும். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் இருந்தால், மீண்டும் விமானப் பயணம் செய்யும்போது அந்தத் தொகையை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்.

2021 மாா்ச் 31-ஆம் தேதி வரை இந்த வசதி அளிக்கப்பட வேண்டும். ஏற்கெனவே முன்பதிவு செய்த இடத்துக்கு மட்டுமல்லாது, தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப எந்த இடத்துக்கு வேண்டுமானாலும் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள வசதி அளிக்க வேண்டும். 2021 மாா்ச் 31-ஆம் தேதி வரை வாடிக்கையாளா் விமான டிக்கெட் எதையும் முன்பதிவு செய்யாவிட்டால், அவருக்கு விமான நிறுவனங்கள் பணத்தை திருப்பிச் செலுத்திவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com