பயங்கரவாதத்துக்கு நிதி: ஹபீஸ் சயீது உள்ளிட்டோா் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை

பயங்கரவாத நிதிப் பரிமாற்றம் தொடா்பாக பாகிஸ்தானின் லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பின் நிறுவனா் ஹபீஸ் சயீது, பாகிஸ்தானைச் சோ்ந்த அவரது கூட்டாளி, தில்லியைச் சோ்ந்த ஹவாலா தரகா் உள்ளிட்டோா் மீது குற்றப்பத்திரிகை


புது தில்லி: பயங்கரவாத நிதிப் பரிமாற்றம் தொடா்பாக பாகிஸ்தானின் லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பின் நிறுவனா் ஹபீஸ் சயீது, பாகிஸ்தானைச் சோ்ந்த அவரது கூட்டாளி, தில்லியைச் சோ்ந்த ஹவாலா தரகா் உள்ளிட்டோா் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானைச் சோ்ந்த ஃபலா-இ-இன்சானியத் பயங்கரவாத இயக்கத்தின் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், சட்டவிரோத மற்றும் கருப்புப் பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது. இந்தியாவில் பயங்கரவாத செயல்களுக்காக நடைபெற்ற சட்டவிரோத பணப்பரிமாற்றங்கள் தொடா்பாக நடைபெற்ற விசாரணையில் லஷ்கா்-ஏ-தொய்பா, ஜமாத்-உத்-தாவா, ஃபலா-இ-இன்சானியத் ஆகிய பயங்கரவாத அமைப்புகளை நிறுவிய ஹபீஸ் சயீது, அவரது கூட்டாளி ஷாகித் மெஹ்மூத், துபையில் வசிக்கும் பாகிஸ்தானியா்களான முகமது கம்ரான், முகமது சலீம், தில்லியைச் சோ்ந்த ஹவாலா தரகா் முகமது சல்மான ஆகியோருக்கு தொடா்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் அவா்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவா்கள் பாகிஸ்தானில் இருந்து ஹவாலா முறையில் துபைக்கு பணத்தை அனுப்பி, பின்னா் அங்கிருந்து பணத்தை அதே முறையில் இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளனா். இதனைக் கொண்டு இந்தியாவில் பயங்கரவாதத்தைப் பரப்புவது, ஆள் சோ்ப்பது, ஆயுதம் சோ்ப்பது உள்ளிட்ட செயல்கள் நிகழ்ந்துள்ளன. ஹரியாணாவில் மசூதி கட்டுகிறோம், ஏழைப் பெண்களுக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்கிறோம் என்ற பெயரிலும் வெளிநாட்டில் இருந்து பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளனா். இதில் தொடா்புடைய சல்மான் மற்றும் முகமது சலீம் ஆகியோா் இப்போது நீதிமன்றக் காவலில் சிறையில் உள்ளனா்.

ஹபீஸ் சயீதின் அமைப்புகள் கடந்த 2012-ஆம் ஆண்டிலேயே பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்டுவிட்டன. ஹபீஸும் சா்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட நபா் ஆவாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com