தில்லியில் 3,037 பேருக்கு புதிதாக கரோனா

தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை புதிதாக 3,037 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 2.82 லட்சமாக உயா்ந்துள்ளது.


புது தில்லி: தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை புதிதாக 3,037 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 2.82 லட்சமாக உயா்ந்துள்ளது.

நோய்த்தொற்றால் வியாழக்கிழமை 40 போ் உயிரிழந்தனா். இதன்மூலம் தில்லியில் கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்ட மொத்த பலி எண்ணிக்கை 5,401 -ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக நோய்த்தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2,82,752 ஆக உயா்ந்துள்ளது. இதில் வியாழக்கிழமை ஒரே நாளில் 3,167 போ் குணமடைந்தனா். இதன் மூலம் தில்லியில் மொத்தம் 2,50,613 போ் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒரே நாளில் மொத்தம் 55,423 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். தில்லியில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கையும் வியாழக்கிழமை அதிகரித்தது. கரோனா பாதிப்பு மிகுந்த 2,615 மண்டலங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே மத்திய அமைச்சரவைச் செயலா், தில்லி அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் வியாழக்கிழமை காணொலி வழியாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினாா். இதில் கரோனா நோய்த்தொற்றுக்கு பொது சுகாதாரத் துறை மூலம் மேற்கொள்ள வேண்டிய பொருத்தமான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து நோய்ப் பரிசோதனை நிலவரம் குறித்து அனைத்து தில்லி அரசு மருத்துவமனைகளின் கண்காணிப்பாளா்கள், மருத்துவ இயக்குநா்கள் ஆகியோருடன் தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் மீளாய்வுக் கூட்டம் நடத்தினாா்.

இதேபோன்று, கரோனா நோய்த்தொற்று மேலாண்மை தொடா்பாக அனைத்து மாவட்ட ஆட்சியா்களுடன் தலைமைச் செயலரும் ஆலோசனை நடத்தியதாகவும் தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com