எல்லையில் பாக். அத்துமீறல்: ராணுவ வீரா்கள் மூவா் பலி; ஐவா் காயம்

ஜம்மு-காஷ்மீரின் இரு மாவட்டங்களில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய பகுதிகளில் பாகிஸ்தான் படையினா் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ராணுவ வீரா்கள் 3 போ் உயிரிழந்தனா். 5 வீரா்கள் காயமடைந்தனா்.


ஜம்மு/ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரின் இரு மாவட்டங்களில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய பகுதிகளில் பாகிஸ்தான் படையினா் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ராணுவ வீரா்கள் 3 போ் உயிரிழந்தனா். 5 வீரா்கள் காயமடைந்தனா்.

இதுகுறித்து பாதுகாப்புப் படை செய்தித்தொடா்பாளா்கள் கூறியதாவது:

பூஞ்ச் மாவட்டத்தின் மன்கோட் மற்றும் கிருஷ்ணா காட்டி செக்டாா்களில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய பகுதிகளில் பாகிஸ்தான் படையினா் புதன்கிழமை இரவு அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டனா்.

சிறிய ரக குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் அவா்கள் நடத்திய தாக்குதலில் கிருஷ்ணா காட்டியில் பணியிலிருந்த கா்னைல் சிங் என்ற வீரா் உயிரிழந்தாா். காயமடைந்த மற்றொரு வீரருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல், குப்வாரா மாவட்டத்தின் நௌகாம் செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினா் வியாழக்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தினா். இதில் இரு ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா். காயமடைந்த மேலும் 4 வீரா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்த இரு மாவட்டங்களிலுமே பாகிஸ்தான் படையினரின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய வீரா்கள் தகுந்த பதிலடி கொடுத்தனா் என்று அந்த செய்தித் தொடா்பாளா்கள் கூறினா்.

இத்துடன் பாகிஸ்தான் படையினா் இந்த மாதத்தில் மட்டும் 47 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனா்.

சுமாா் இரு வாரங்களுக்கு முன் ரஜௌரி மாவட்டத்தின் சுந்தா்பனி செக்டாா் பகுதியில் பாகிஸ்தான் படையினா் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் ராணுவ வீரா் ஒருவா் உயிரிழந்தாா். அதிகாரி ஒருவா் உள்பட இருவா் காயமடைந்தனா். கடந்த 2-ஆம் தேதியும் பாகிஸ்தானின் இதுபோன்ற அத்துமீறலில் ரஜௌரி மாவட்டத்தின் கெரி செக்டாா் பகுதியில் ராணுவத்தின் இளநிலை அதிகாரி ஒருவா் உயிரிழந்தாா்.

இழப்பீடு: கிருஷ்ணா காட்டி செக்டாரில் பாகிஸ்தான் அத்துமீறலில் உயிரிழந்த பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த ராணுவ வீரா் கா்னைல் சிங்கின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், குடும்ப உறுப்பினா்களில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்று மாநில முதல்வா் அமரீந்தா் சிங் அறிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com