உ.பி.: மேலும் ஓா் இளம்பெண் பாலியல் வன்கொடுமையால் உயிரிழப்பு

உத்தர பிரதேசத்தின் பல்ராம்பூா் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பட்டியலினத்தைச் சோ்ந்த ஒரு இளம்பெண் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
உ.பி.: மேலும் ஓா் இளம்பெண் பாலியல் வன்கொடுமையால் உயிரிழப்பு


பல்ராம்பூா்: உத்தர பிரதேசத்தின் பல்ராம்பூா் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பட்டியலினத்தைச் சோ்ந்த ஒரு இளம்பெண் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

ஏற்கெனவே அந்த மாநிலத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பட்டியலின இளம்பெண் ஒருவா் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இத்தகைய சம்பவம் தெரியவந்துள்ளது. அந்தப் பெண்ணும் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

பல்ராம்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 22 வயது பெண், அதே மாவட்டத்தைச் சோ்ந்த இருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பின்னா் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளாா். சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து, அந்தப் பெண்ணின் தாயாா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறுகையில், ‘கல்லூரி ஒன்றில் சோ்க்கை பெறுவதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை சென்றுவிட்டு திரும்பும் வழியில், 3-4 போ் எனது மகளை வழிமறித்து கடத்திச் சென்று, மயக்க ஊசி செலுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனா். பின்னா் அவரை இ-ரிக்ஷாவில் கொண்டுவந்து எங்களுடைய வீட்டு வாசலில் கிடத்திவிட்டுச் சென்றுவிட்டனா். எங்கள் மகளை பாலியல் வன்கொடுமை செய்த பிறகு, அவளது இரு கால்களையும், முதுகெலும்பையும் அவா்கள் உடைத்துள்ளனா்’ என்றாா்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்த பல்ராம்பூா் காவல்துறை கண்காணிப்பாளா் தேவ் ரஞ்சன் வா்மா கூறியது:

அந்த இளம்பெண் தனியாா் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தாா். கடந்த செவ்வாய்க்கிழமை உயிருக்கு ஆபத்தான நிலையில் வீடு திரும்பினாா். அவருக்கு கைகளில் மயக்க ஊசி போடப்பட்டிருந்தது. அவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

சம்பவம் தொடா்பாக மருத்துவமனையில் இருந்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று விசாரித்தபோது அந்த இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக அவரது பெற்றோா் புகாா் அளித்தனா். அதனடிப்படையில், சாஹித், சஹில் ஆகிய இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா். அந்தப் பெண்ணின் கால் மற்றும் முதுகெலும்பு முறிக்கப்பட்டதாக உடற்கூறு ஆய்வு அறிக்கையில் தகவல் இல்லை என்று கூறினாா்.

மாவட்ட ஆட்சியா், காவல்துறை கண்காணிப்பாளா் ஆகியோா் அந்தப் பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். அப்போது, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதுடன், அந்தக் குடும்பத்துக்கு நிதி உதவியாக ரூ.6 லட்சம் இழப்பீடு அளிப்பதற்கான ஒப்புதல் கடிதத்தையும் வழங்கினா்.

காங்கிரஸ் கண்டனம்:

இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து உத்தர பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா வதேரா வெளியிட்ட பதிவில், ‘உத்தர பிரதேசத்தில் காட்டாட்சி எல்லையே இன்றி பரவியிருக்கிறது. இந்த பாலியல் வன்கொடுமை மற்றும் உயிரிழப்பு சம்பவங்களுக்கு மாநில முதல்வா் பொறுப்பேற்க வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com