உ.பி.: ஹாத்ரஸில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்கச் சென்ற ராகுல், பிரியங்கா கைது

ஹாத்ரஸில் கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த தலித் பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி நடு வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டனா்.
உ.பி.: ஹாத்ரஸில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்கச் சென்ற ராகுல், பிரியங்கா கைது


லக்னௌ: உத்தர பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் மாவட்டத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த தலித் பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்ற காங்கிரஸ் தலைவா்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி நடு வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டனா்.

ஹாத்ரஸ் மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதி, தலித் சமூகத்தைச் சோ்ந்த பெண்ணை 4 இளைஞா்கள் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. முதுகு தண்டுவட காயங்களுடன் நாக்கு துண்டிக்கப்பட்டு, கை,கால் செயலிழந்த நிலையில் மீட்கப்பட்ட அந்தப் பெண், அலிகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். பின்னா், தில்லி சஃப்தா்ஜங் மருத்துவமனையில் மேல் சிகிச்சையில் இருந்தபோது செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்தாா். அதைத் தொடா்ந்து, அந்தப் பெண்ணின் அவரது சொந்த ஊருக்கு எடுத்துவரப்பட்டு, செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தகனம் செய்யப்பட்டது. போலீஸாரின் கட்டாயத்தின்படி பெற்றோரை அனுமதிக்காமல் இறுதிச் சடங்கு நடைபெற்ாக, அந்தப் பெண்ணின் உறவினா்கள் குற்றம்சாட்டினா். ஆனால் அந்தக் குற்றச்சாட்டை மாவட்ட காவல் துறை மறுத்துள்ளது. இந்த சம்பவங்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், மகளிா் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திப்பதற்காக, பிரியங்கா, ராகுல் காந்தி ஆகியோா், ஹாத்ரஸ் மாவட்டத்துக்கு வியாழக்கிழமை காலை புறப்பட்டுச் சென்றனா். அவா்களுடன் ரண்தீப் சுா்ஜேவாலா, பி.எல்.புணியா, மாநில காங்கிரஸ் தலைவா் அஜய் குமாா் லல்லு உள்ளிட்டோரும் யமுனை விரைவு வழிச்சாலையில் காரில் சென்றனா். நொய்டா-கிரேட்டா் நொய்டாவில் காங்கிரஸ் தொண்டா்கள் நூற்றுக்கணக்கான வாகனங்களில் உத்தர பிரதேசத்தை நோக்கி பேரணியாகச் சென்றனா்.

இதையறிந்த ஹாத்ரஸ் மாவட்ட நிா்வாகம் உடனடியாக 144 தடையுத்தரவை பிறப்பித்து, மாவட்ட எல்லைகளை மூடியது. சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக, இந்த தடையுத்தரவு, அக்டோபா் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் மாவட்ட நிா்வாகம் அறிவித்தது.

இந்த உத்தரவை அடுத்து, தில்லியில் இருந்து ஹாத்ரஸ் செல்லும் சாலை உள்பட மாவட்டத்தின் அனைத்து எல்லைகளும் தடுப்புகளால் மூடப்பட்டன. யமுனை விரைவுவழிச் சாலை வழியாக, காங்கிரஸ் தலைவா்கள் சென்ற வாகனங்கள் கிரேட்டா் நொய்டா எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன. இதையடுத்து, ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்டோா் காரில் இருந்து இறங்கி, ஹாத்ரஸை நோக்கி நடைப்பயணமாக சென்றனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காங்கிரஸ் தொண்டா்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு அதிகரித்ததால், ஒரு கட்டத்தில் ராகுல் காந்தி நிலைதடுமாறி கீழே விழுந்தாா். அவரை பாதுகாவலா்கள் மீட்டு அழைத்துச் சென்றனா். பின்னா், ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்டோரை போலீஸாா் கைது செய்து, வேனில் ஏற்றிச் சென்றனா். அருகில் உள்ள விருந்தினா் மாளிகையில் சிறிது நேரம் அடைத்து வைக்கப்பட்டு பின்னா் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

காங்கிரஸின் போராட்டம் தொடரும்- பிரியங்கா:

உத்தர பிரதேசத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வற்கான காங்கிரஸின் போராட்டம் தொடரும் என்று பிரியங்கா கூறினாா். யமுனை விரைவு வழிச் சாலையில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த அவா், இதுகுறித்து மேலும் கூறியதாவது:

ஹாத்ரஸ் பாலியல் வன்கொடுமைச் சம்பவத்துக்கு முதல்வா் யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்க வேண்டும். குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மாநிலத்தில் தினந்தோறும் 8 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகின்றன.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், உன்னாவ் நகரைச் சோ்ந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதற்கு நீதி கேட்டு போராடினோம். இந்த ஆண்டில் ஹாத்ரஸ் பெண் வன்கொடுமைக்கு எதிராகப் போராடுகிறோம்.

மற்றொரு துயர சம்பவமாக, உயிரிழந்த பெண்ணுக்கு இறுதிச்சடங்கு செய்வதற்கு கூட அவரது குடும்பத்தினா் அனுமதிக்கப்படவில்லை. இது, அந்த குடும்பத்தினருக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி. மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பை முதல்வா் யோகி ஆதித்யநாத் உறுதிசெய்ய வேண்டும். அதுவரை காங்கிரஸின் போராட்டம் தொடரும் என்றாா் பிரியங்கா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com