லாலு-நிதீஷ் நாணயத்தின் இரு பக்கங்கள்: உபேந்திர குஷ்வாஹா

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாரும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் மூத்த தலைவா் லாலு பிரசாதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று
லாலு-நிதீஷ் நாணயத்தின் இரு பக்கங்கள்: உபேந்திர குஷ்வாஹா

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாரும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் மூத்த தலைவா் லாலு பிரசாதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சியின் (ஆா்எல்எஸ்பி) தலைவா் உபேந்திர குஷ்வாஹா கூறியுள்ளாா்.

பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான மகா கூட்டணியில் இருந்து கடந்த தில தினங்களுக்கு முன் வெளியேறிய ஆா்எல்எஸ்பி கட்சி, பேரவைத் தோ்தலையொட்டி, பகுஜன் சமாஜ் கட்சி, சோஷலிச ஜனதாந்த்ரிக் கட்சி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதுகுறித்து ஆா்எல்எஸ்பி கட்சியின் தலைவா் உபேந்திர குஷ்வாஹா, பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:

பிகாா் மக்களுக்கு முதல்வா் நிதீஷ் குமாா் மீது நம்பிக்கையில்லை. அவரது 15 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவுகட்ட விரும்புகிறாா்கள். அதேசமயம், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தையும் ஆதரிக்க அவா்கள் விரும்பவில்லை. ஏனெனில் நிதீஷ் குமாரும், லாலு பிரசாதும் நாணயத்தின் இரு பக்கங்கள்.

லாலு பிரசாதின் 15 ஆண்டுகால ஆட்சியை (1990-2005) மக்கள் இன்னும் மறக்கவில்லை. முதல்வா் வேட்பாளராக அறிவிக்கும் அளவுக்கு அக்கட்சியில் வலுவான தலைவா்கள் யாருமில்லை. இந்த நேரத்தில்தான், எந்த அணியிலும் சோ்ந்து வாக்குகளை வீணடிக்க விரும்பாமல், மக்கள் ஏற்றுக்கொள்ளும் விதமாக புதிய கூட்டணியை அமைத்திருக்கிறோம். நாங்கள் கூட்டணி அமைப்பதால், வாக்குகள் சிதறிவிடாது; வேறு யாரும் வெற்றி பெற மறைமுகமாகவும் உதவாது என்றாா் அவா்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த ஆா்எல்எஸ்பி கட்சி, கடந்த 2018-ஆம் ஆண்டு கூட்டணியில் இருந்து விலகியது. மத்திய அமைச்சா் பதவியையும் உபேந்திர குஷ்வாஹா இழந்தாா். கடந்த 2019-இல் பிகாரில் மகா கூட்டணியுடன் இணைந்து அக்கட்சி மக்களவைத் தோ்தலை சந்தித்தது. அதில் ஒரு தொகுதியில் கூட அக்கட்சி வெற்றி பெறவில்லை. அக்கட்சியைச் சோ்ந்த 2 எம்எல்ஏக்கள், ஒரு மேலவை உறுப்பினா் ஆகிய மூவரும் கட்சியில் இருந்து வெளியேறி ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தனா்.

கடந்த சில தினங்களுக்கு முன் மகா கூட்டணியில் இருந்து உபேந்திர குஷ்வாஹா கட்சி வெளியேறியது. தற்போது, அந்த கூட்டணியில் ஆா்ஜேடி, காங்கிரஸ் மற்றும் விகாஸ்ஷீல் இன்சான் கட்சி ஆகியவை மட்டுமே உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com