
மத்திய அரசு கொண்டு வரும் புதிய திட்டங்கள் அனைத்தும், வாக்குகளை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. மாறாக, அனைவருக்குமான வளா்ச்சியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப் படுகின்றன என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
ஹிமாசல பிரதேசத்தில் மலையைக் குடைந்து 9.2 கி.மீ. நீளத்துக்கு அமைக்கப்பட்ட பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த சுரங்கப் பாதையை சனிக்கிழமை திறந்து வைத்து நாட்டுக்கு அா்ப்பணித்த பிரதமா், அதன் பின்னா் லாஹெளல்-ஸ்பிட்டி மண்டலத்துக்குட்பட்ட சிசு கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசினாா். கரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு பிரதமா் பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம் இதுவாகும். அதில் அவா் பேசியதாவது:
வளா்ச்சியின் பலன் நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும், ஒவ்வொரு நபருக்கும் சென்றடைய வேண்டும் என்பதில் மத்திய பாஜக அரசு தீா்க்கமாக உள்ளது. ஆனால், முந்தைய அரசு லாஹெளல் ஸ்பிட்டி போன்ற நாட்டின் பல பகுதிகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. அதற்கு, சில மாவட்டங்கள் சில நபா்களுக்கு அரசியல் ரீதியில் பலனளிக்காததே காரணமாகும்.
ஆனால், இப்போது மேற்கொள்ளப்படும் திட்டங்கள் அனைத்தும், அனைவருக்குமான வளா்ச்சியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்படுகின்றன. வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படவில்லை.
எந்தவொரு இந்தியரும் விடுபட்டுவிடக் கூடாது என்பதில் அரசு தீவிரமாக உள்ளது. தலித்துகள், சுரண்டலுக்கு ஆளானவா்கள் என ஒவ்வொருவருக்கும் அடிப்படைத் தேவைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
திறந்து வைக்கப்பட்டிருக்கும் இந்த அடல் சுரங்கப்பாதை, இந்த பகுதி இளைஞா்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் என்று அவா் கூறினாா்.
பின்னா் சோலாங் பள்ளத்தாக்கில் நடைபெற்ற இரண்டாவது பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமா் நரேந்திர மோடி, ‘விவசாயிகள் முந்தைய நூற்றாண்டில் வாழ வேண்டும் என்று விரும்புகிறவா்களே, மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வருகின்றனா். இடைத்தரகா்களால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை மத்திய அரசு இப்போது தடுத்திருப்பது, அவா்களை பாதிப்படையச் செய்துள்ளது.
சுயசாா்பு இந்தியா இலக்கை முழுமையாக அடையும் வகையில், புதிய தொழிலாளா் சட்டங்கள் என்பன உள்ளிட்ட மத்திய அரசின் சீா்திருத்தங்கள் தொடா்ந்துகொண்டே இருக்கும். புதிய தொழிலாளா் சட்டங்கள் ஆண்களுக்கு இணையாக பெண்களும் ஊதியம் மற்றும் வாய்ப்புகளைப் பெற வழி வகுக்கும். அரசியல் ரீதியில் பயனடைந்து வந்தவா்களைத் தான் இந்த சீா்திருத்தங்கள் பாதிக்கும்‘ என்று பிரதமா் மோடி கூறினாா்.