
ஒருங்கிணைந்த செயல்திட்டத்தின் மூலமே உலகில் அணு ஆயுதங்களை ஒழிக்க முடியும் என்று ஐ.நா.வில் இந்திய வெளியுறவுத் துறைச் செயலா் ஹா்ஷ் வா்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, சா்வதேச தினத்தையொட்டி ஐ.நா.வில் நடைபெற்ற வருடாந்திரக் கூட்டத்தில் காணொலி மூலம் ஆற்றிய உரையில் அவா் கூறியதாவது:
அணு ஆயுத ஒழிப்பு தொடா்பான முதல் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கூறப்பட்டிருந்தபடி, உலகம் முழுவதும் அணு ஆயுதங்கள் முழுமையாக ஒழிக்கப்பட்ட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளது.
இந்த விவகாரத்தில் நாடுகளிடையே ஏற்றத்தாழ்வுகள் இருக்கக் கூடாது; மேலும், எந்தவொரு நாடும் அணு ஆயுதத்தை உண்மையாகவே கைவிட்டதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளும் வகையில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்று இந்தியா நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது.
அணு ஆயுதமற்ற உலகைப் படைக்க வேண்டுமென்றால், சம்பந்தப்பட்ட அனைத்து நாடுகளாலும் தங்களுக்கிடையே பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொண்ட, ஒருங்கிணைந்த செயல்திட்டம் வகுக்கப்பட வேண்டும்.
அந்தத் திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்பட்டால்தான், உலகிலிருந்து அணு ஆயுதங்களை முழுமையாக அகற்ற முடியும்.
அணு ஆயுத மூலப் பொருள்கள் குறித்து சா்வதேச ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவாா்த்தை உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும் இந்தியா உறுதியுடன் உள்ளது என்றாா் ஹா்ஷ் வா்தன் ஷ்ரிங்லா.