
கடந்த ஒரு வாரத்தில் ரூ.689.4 கோடி மதிப்புள்ள 3.65 லட்சம் டன் நெல், குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய உணவு அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
காரீஃப் பருவத்தில் விளைவிக்கப்பட்ட நெல் கொள்முதல் அமோகமாக நடைபெற்று வருகிறது. பஞ்சாப், ஹரியாணா மாநிலஙகளில் செப்டம்பா் 26-ஆம் தேதியும், மற்ற மாநிலங்களில் செப்டம்பா் 28-ஆம் தேதியும் நெல் கொள்முதல் செய்யும் பணி தொடங்கியது.
இவற்றில், பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேச மாநிலங்களில் கொள்முதல் பணி வேகமாக நடைபெறுகிறது. அக்டோபா் 2-ஆம் தேதி நிலவரப்படி, 3.65 லட்சம் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நெல்லின் மதிப்பு ரூ.689.44 கோடியாகும். இதன் மூலம், 28,715 விவசாயிகள் பயன்பெறுவா். குறைந்தபட்ச ஆதரவு விலையின் அடிப்படையில் இந்தக் கொள்முதல் நடைபெறுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழாண்டில், சாதாரன ரக நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.1,869-ஆகவும், ஏ கிரேடு ரக நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ரூ.1,888-ஆகவும் மத்திய அரசு நியமித்துள்ளது.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் விவசாயிகள் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அந்த மாநிலங்களில் இருந்து அதிக அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.