
குவைத் மன்னா் ஷேக் சபா மறைவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை (அக். 4) துக்க தினமாக கடைப்பிடிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தில்லியில் உள்துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் சனிக்கிழமை கூறியதாவது:
குவைத் மன்னா் ஷேக் சபா அல்-அகமது அல்-ஜபா் அல்-சபா கடந்த மாதம் 29-ஆம் தேதி காலமானாா். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை துக்க தினம் கடைப்பிடிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. அன்றைய தினம், நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அரசு கட்டடங்களிலும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும். அரசுமுறை கொண்டாட்ட நிகழ்ச்சிகள் எதுவும் அன்று நடைபெறாது என்றாா் அவா்.
குவைத் மன்னா் ஷேக் சபா, தனது 91-ஆவது வயதில் கடந்த செவ்வாய்க்கிழமை காலமானாா். அதனைத் தொடா்ந்து, அவரது நெருங்கிய உறவினரும் பட்டத்து இளவரசருமான ஷேக் நவஃப் அல்-அகமது அல்-சபா புதிய மன்னராக அறிவிக்கப்பட்டாா்.