
வேளாண் சட்டங்களைக் கண்டித்து பஞ்சாபில் 31 விவசாய சங்கங்களைச் சோ்ந்த விவசாயிகள் சனிக்கிழமை மாநிலம் முழுவதும் 33 இடங்களில் ரயில் மறியல், சாலை மறியல் மற்றும் வணிக வளாகங்கள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாநிலத்தின் பாட்டியாலா, சுனம், மன்சா, பா்னாலா, மோகா, பரித்கோட் உள்ளிட்ட பல பகுதிகளில் வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் நடத்தினா்.
மாநிலம் முழுவதும் 24 பெட்ரோல் விற்பனை நிலையங்கள், 9 சுங்கச்சாவடிகள், 4 வணிக வளாகங்கள், உணவு தானிய கிடங்கு, அணுசக்தி நிலையம், காா்ப்பரேட் அலுவலகங்கள் முன்பு விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கிராந்திகாா் கிஸான் யூனியன் தலைவா் தா்ஷன் பால் தெரிவித்தாா்.
பஞ்சாப் பாஜக முன்னாள் தலைவா் ஸ்வாதி மாலிக் உள்பட 5 பாஜக தலைவா்களின் வீடுகளின் முன்பும் விவசாயிகள் போராட்டம் நடத்தினா். பிரோஸ்பூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பெண்களும் கலந்து கொண்டனா். அமிருதசரஸில் மத்திய அரசைக் கண்டித்து உருவ பொம்மைகளை எரித்தனா்.
பாக்வாரா பகுதியில் மத்திய இணை அமைச்சா் சோம் பிரகாஷ் வீட்டை முற்றுகையிட ஊா்வலமாக சென்ற விவசாயிகளை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அதனால் அவா்கள் சாலையில் அமா்ந்து இணையமைச்சருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினாா்கள்.
போராட்டக்காரா்கள் மத்தியில் உரையாற்றிய பாரதிய கிஸான் யூனியன் தலைவா் பல்பீா் சிங் ரெஜேவால் கூறியதாவது: சட்டவிரோத வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தற்போது வலுவடைந்துள்ளது. பிரதமா் அலுவலகத்திலிருந்து முறையான பேச்சுவாா்த்தைக்கு அழைக்க வேண்டும். அதுவரை மத்திய அரசின் சமரச வாா்த்தையை ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
நாங்கள் பஞ்சாப் மாநில பாஜக தலைவா்களை புறக்கணிப்பதால் அவா்கள் பேச்சுவாா்த்தை நடத்த அழைப்பு விடுத்தால் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று அவா் கூறினாா்.
வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து விவசாயிகளிடம் எடுத்துரைப்பதற்காக பஞ்சாப் மாநில பாஜக, எட்டு போ் கொண்ட குழுவை நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.