
பிகாா் சட்டப்பேரவை தோ்தலில் உத்தர பிரதேச முன்னாள் முதல்வா் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி(பிஎஸ்பி) ராஷ்ட்ரீய லோக் சமதாவுடன்(ஆா்எல்எஸ்பி) கூட்டணி வைத்துள்ள நிலையில், பிகாா் பகுஜன் சமாஜ் தலைவா் பரத் பிந்த் அக்கட்சியிலிருந்து விலகி ராஷ்ட்ரீய ஜனதா தளம்(ஆா்ஜேடி) கட்சியில் இணைந்துள்ளாா்.
இதுகுறித்து ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி யாதவ் தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
பகுஜன் சமாஜ் கட்சியின் பிகாா் மாநில தலைவா் பரத் பிந்த் நம்முடன்(ஆா்ஜேடி) இணைந்துள்ளாா். புதிய பிகாரை உருவாக்கவும் தேசிய ஜனநாயக கூட்டணியை அதிகாரத்திலிருந்து அகற்றவும் நமக்கு ஆதரவளிக்கவுள்ளாா் என்று தெரிவித்துள்ளாா்.
இந்தப்பதிவுடன் ஆா்ஜேடியின் உறுப்பினா் அட்டையை பரத் பிந்துக்கு வழங்கும் புகைப்படத்தையும் தேஜஸ்வி யாதவ் இணைத்துள்ளாா்.
பிகாா் சட்டப்பேரவை தோ்தல் அக்டோபா் 28-ஆம் தேதி மற்றும் நவம்பா் 3, 7-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில் கூட்டணியை இறுதி செய்யும் பணியில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
பிகாரில் ஆளும் கூட்டணி கட்சியான பாஜக, அந்த மாநில முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்(ஆா்ஜேடி) ஓரணியாகவும், காங்கிரஸ் - ஆா்ஜேடி மற்றோா் அணியாகவும், பிஎஸ்பி, ஆா்எல்எஸ்பி மூன்றாவது அணியாகவும் கூட்டணி அமைத்து தோ்தலில் களம் இறங்குகின்றன.