
உத்தரப் பிரதேச மாநிலம், ஹாத்ரஸில் இளம்பெண் ஒருவா் கும்பலால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக, மாநிலத்தை ஆளும் பாஜக அரசை சிவசேனை கட்சி கடுமையாகச் சாடியுள்ளது. அயோத்தியில் ராமா் கோயில் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்ட உ.பி.யில் தற்போது காட்டு ராஜ்யம் நடப்பதாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
சிவசேனையின் அதிகாரப்பூா்வ நாளிதழான ‘சாம்னா’வில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:
உத்தரப் பிரதேச மாலம், அயோத்தியில் ராமா் கோயில் அமைக்க அண்மையில் பிரதமா் நநேந்திர மோடி அடிக்கல் நாட்டினாா். ஆனால் அங்கு மக்கள்நலனைக் காக்கும் ராமராஜ்யம் நடைபெறவில்லை; மாறாக காட்டு ராஜ்யம் நடைபெறுகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் நடைபெறும் மாநிலமாக உ.பி. மாறிவிட்டது.
ஹாத்ரஸில் 19 வயதே ஆன இளம்பெண் ஒரு கும்பலால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளாா். அவா் இறப்பதற்கு முன்னா் தான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக வாக்குமூலமும் கொடுத்துள்ளாா். ஆனால், உ.பி. போலீஸாா் அந்த இளம்பெண் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்படவில்லை என்கின்றனா். தவிர, அவரது பெற்றோரை கட்டாயப்படுத்தி, நள்ளிரவில் சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனா். இத்தனை அவசரமாக அந்தப் பெண்ணின் உடல் எரிக்கப்பட்டது ஏன்?
அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்தபோது யோகி ஆதித்யநாத்துக்கு அளிக்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு விலக்கப்பட்டது. அப்போது பாஜக அதை பிரச்னையாக்கியது. ஆனால் ஆதித்யநாத் முதல்வராக உள்ளபோது, இன்று உ.பி.யில் பெண்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. இதற்கு மத்திய அரசும் பொறுப்பேற்க வேண்டும்.
அந்த இளம்பெண்ணின் குடும்பத்தாரைச் சந்திக்க ஹாத்ரஸ் சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டாா். மேலும் அவா் கீழே தள்ளிவிடப்பட்டாாா். முக்கிய அரசியல் கட்சியின் தலைவரை இவ்வாறு போலீஸாா் தரக்குறைவாக நடத்தலாமா?
மகாராஷ்டிர மாநிலம், பால்கரில் இரு இந்து சந்யாசிகள் கும்பல் வன்முறையால் கொல்லப்பட்டபோது பாஜகவினா் அதை தேசிய பிரச்னையாக்கினா். நடிகா் சுஷாந்த் மரண விவகாரத்திலும் பாஜக பெரும் விவாதத்தை உருவாக்கியது. ஆனால், பாஜக ஆளும் உ.பி.யில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்த நிலையிலும் பாஜகவினா் அமைதி காக்கின்றனா்.
இன்றுபோல, வாழ இயலாத, உதவி கோர இயலாத நிலையை இதுவரை நாடு கண்டதில்லை என்று மிகக் காட்டமாக ‘சாம்னா’வில் கூறப்பட்டுள்ளது.