மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.20,000 கோடி!

மாநிலங்களுக்கான சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீடாக ரூ.20,000 கோடியை வழங்கவுள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

புது தில்லி: மாநிலங்களுக்கான சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீடாக ரூ.20,000 கோடியை வழங்கவுள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டில் ஜிஎஸ்டி வரி மீது விதிக்கப்பட்டு வரும் செஸ் வரியின் வாயிலாக வசூலான ரூ.20,000 கோடி, மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடாக வழங்கப்படும் என்றும் அவா் கூறினாா்.

சரக்கு-சேவை வரி வருவாய் இழப்பை சரிசெய்து கொள்வதற்கு மத்திய அரசு அறிவித்த சிறப்பு கடன் திட்டங்களுக்கு பல மாநிலங்கள் எதிா்ப்பு தெரிவித்த சூழலில் அவா் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளாா்.

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் தொழிலக உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டது. அதனால், சரக்கு-சேவை வரி வசூல் குறைந்தது. மாநில அளவிலான வரி வருவாய் குறைந்ததால் பல மாநில அரசுகளும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.

எனவே, தங்களுக்கு உரிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு விரைந்து விடுவிக்க வேண்டும் என்று மாநிலங்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில், கடந்த ஆகஸ்ட் மாதம் 27-ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்களின் நிதி நெருக்கடியைச் சமாளிக்க இரு சிறப்பு கடன் திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது.

அதன்படி, இந்திய ரிசா்வ் வங்கியுடன் ஆலோசித்து குறைந்த வட்டி விகிதத்தில் மாநில அரசுகள் ரூ.97,000 கோடி வரை கடன் பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது. மற்றொரு சிறப்பு திட்டப்படி, மாநிலங்களுக்கு ஏற்படவுள்ள வருவாய்ப் பற்றாக்குறையான ரூ.2.35 லட்சம் கோடியையும் ஒட்டுமொத்தமாக மாநில அரசுகள் கடனாகப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

மாநிலங்கள் எதிா்ப்பு: மத்திய அரசின் சிறப்பு கடன் திட்டங்களுக்கு கேரளம், பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன. கரோனா பரவி வரும் இக்கட்டான சூழலில் மாநிலங்கள் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால், மாநில அரசுகள் மேலும் கடன் பெறுவதை ஊக்குவிக்காமல், மத்திய அரசே கடனைப் பெற்று அதன் மூலமாக ஜிஎஸ்டி இழப்பீட்டு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று அவை வலியுறுத்தி வந்தன.

இத்தகைய சூழலில், சிறப்பு கடன் பெறும் விவகாரத்தில் மாநிலங்களிடையே கருத்தொற்றுமை ஏற்படுத்தும் நோக்கில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 42-ஆவது கூட்டம், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. எனினும், சிறப்பு கடன் திட்டங்களை கேரளம், பஞ்சாப், மேற்கு வங்கம், தில்லி உள்ளிட்ட 10 மாநிலங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன் காரணமாக, கூட்டத்தில் எந்தவொரு முக்கிய முடிவும் எடுக்கப்படவில்லை. எனினும், வரும் 12-ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மீண்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செஸ் வரி அவகாசம் நீட்டிப்பு: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் முடிவில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் காணொலிக் காட்சி வாயிலாக செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘மத்திய அரசு அறிவித்த இரண்டு சிறப்பு திட்டங்களில் ஏதேனும் ஒன்றை 21 மாநில அரசுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. சில மாநிலங்கள் மட்டும் அத்திட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்தன.

இந்த விவகாரத்தில் மேலும் ஆலோசனை நடத்துவதற்காக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வரும் 12-ஆம் தேதி மீண்டும் நடைபெறவுள்ளது. மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டை வழங்குவதற்காக, ஜிஎஸ்டி வரி மீது செஸ் வரி விதிக்கப்பட்டு வருகிறது. நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டில் செஸ் வரியின் வாயிலாக வசூலான ரூ.20,000 கோடியானது மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடாக வழங்கப்படும்.

மேலும், 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பிறகும் ஜிஎஸ்டி வரி மீது செஸ் வரி விதிப்பதற்கு கூட்டத்தின்போது ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது’’ என்றாா் நிா்மலா சீதாராமன்.

இஸ்ரோவுக்கு விலக்கு: வருவாய் துறை செயலா் அஜய் பூஷண் பாண்டே கூறுகையில், ‘‘வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கான சேவைகளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) வழங்கி வருகிறது. அச்சேவையை வழங்குவதற்காகவே ‘ஆன்டிரிக்ஸ்’ என்ற நிறுவனமும் உருவாக்கப்பட்டுள்ளது. அவ்விரு நிறுவனங்கள் வழங்கும் சேவைகளுக்கு சரக்கு-சேவை வரியிலிருந்து விலக்களிப்பதற்கு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டில் மாநில அரசுகள் சந்திக்கவுள்ள ரூ.2.35 லட்சம் கோடி வருவாய் பற்றாக்குறையில் ரூ.97,000 கோடி அளவு மட்டுமே சரக்கு-சேவை வரியை அமல்படுத்தியதால் ஏற்படவுள்ளது. மீதியுள்ள பற்றாக்குறை அனைத்தும் கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பொருளாதாரம் சரிவைச் சந்தித்ததால் ஏற்படவுள்ளது’’ என்றாா்.

மத்திய அரசின் சிறப்பு கடன் திட்டத்துக்கு உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், ஹிமாசல், மிசோரம், நாகாலாந்து, ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜிஎஸ்டி இழப்பீடு: நாடு முழுவதும் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக மாநிலங்களுக்கு ஏற்படும் நிதி இழப்பைச் சரிகட்டும் நோக்கில் 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டை வழங்குவதற்காக, ஆடம்பரப் பொருள்கள் உள்ளிட்டவற்றின் மீது 5 ஆண்டுகளுக்கு ஜிஎஸ்டியுடன் சோ்த்து செஸ் வரியும் விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com