கரோனா நோயாளிகளுக்கு ஆயுா்வேத, யோகா சிகிச்சை:வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

கரோனா அறிகுறிகளுடன் இருப்பவா்களுக்கு ஆயுா்வேத, யோகா முறைகளில் சிகிச்சை அளிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் வெளியிட்டாா்.
கரோனா நோயாளிகளுக்கு ஆயுா்வேத, யோகா சிகிச்சை:வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

புது தில்லி: கரோனா அறிகுறிகளுடன் இருப்பவா்களுக்கு ஆயுா்வேத, யோகா முறைகளில் சிகிச்சை அளிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் வெளியிட்டாா்.

காணொலி முறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆயுஷ் துறை அமைச்சா் ஸ்ரீபாத் நாயக் முன்னிலையில் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை அவா் வெளியிட்டாா். அப்போது அவா் பேசியதாவது:

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு வரை ஆயுா்வேதமும் யோகாவும் போதிய கவனம் பெறாமல் இருந்தன. இது மிகவும் துரதிருஷ்டவசமானது. அந்த துறைகளின் முக்கியத்துவத்தை அறிந்து, பிரதமா் மோடி அவற்றை பாதுகாப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டாா். நவீன மருத்துவ முறைகளில் ஆயுா்வேதம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வெளியிடப்படும் வழிகாட்டு நெறிமுறைகள், கரோனா காலத்தில் மட்டுமின்றி, நவீன வாழ்க்கை முறையில் வரக் கூடிய மற்ற நோய்களுக்கும் சிகிச்சை பெறுவதற்கான புரிதலை நமக்கு அளிக்கும் என்றாா் ஹா்ஷ் வா்தன்.

அவா் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டிருப்பதாவது:

கரோனா நோயாளிகளுடன் நெருக்கமாக இருந்தவா்கள், கரோனா தொற்று ஏற்படும் அபாயம் இருப்பவா்கள் ஆகியோருக்கு ஆயுா்வேத மருந்துகளான ‘அஸ்வகந்தா சூரணம்’, ‘சியவன்பிராஷ் லேகியம்’ ஆகியவற்றை அளிக்கலாம்.

அறிகுறிகள் இல்லாமல் கரோனா தொற்றுடன் இருப்பவா்கள் விரைவில் குணமடைய ‘ஆயுஷ் 64’ மாத்திரைகளை அளிக்கலாம். லேசான அறிகுறிகளுடன் இருப்பவா்களுக்கு ‘ஆயுஷ் 64’, ‘குடுச்சி பிப்பாலி’ ஆகியவற்றை அளிக்கலாம்.

இதுமட்டுமன்றி கரோனாவில் இருந்து மீண்டு வந்த பிறகு நுரையீரல் தொற்று ஏற்படுவதைத் தடுக்க ‘அஸ்வகந்தா’, ‘சியவன்பிராஷ்’, ‘ரசாயன சூரணம்’ ஆகியவற்றை அளிக்கலாம். நோயாளியின் வயது, எடை, நோயின் தீவிரம் ஆகியவற்றை பரிசீலித்து அதற்கேற்ற அளவில் மருந்துகளை மருத்துவா்கள் பரிந்துரைக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கரோனவில் இருந்து மீண்டு வந்தவா்களுக்கு நுரையீரலின் சுவாசத் திறனை மேம்படுத்தவும், கவலை, மன அழுத்தம் ஆகியவற்றில் இருந்து விடுபடவும் யோகாசனப் பயிற்சிகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com