பிகாா் பேரவைத் தோ்தல்: தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிவு

பிகார் சட்டப் பேரவைத் தேர்தலுக்காக, தொகுதிப் பங்கீட்டு முடிவை தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவித்துள்ளது.
பிகார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த முதல்வர் நிதீஷ்குமார், துணை முதல்வர் சுஷீல் குமார் மோடி உள்ளிட்டோர்.
பிகார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த முதல்வர் நிதீஷ்குமார், துணை முதல்வர் சுஷீல் குமார் மோடி உள்ளிட்டோர்.

பாட்னா/புது தில்லி: பிகார் சட்டப் பேரவைத் தேர்தலுக்காக, தொகுதிப் பங்கீட்டு முடிவை தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவித்துள்ளது.
மொத்தமுள்ள 243 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு) கட்சிக்கு 122 தொகுதிகளும் பாஜகவுக்கு 121 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த முடிவுகளை, பாட்னாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதீஷ் குமார் அறிவித்தார். பாஜக மற்றும் ஜேடியு தலைவர்கள் பங்கேற்ற அந்த சந்திப்பில், அவர் மேலும் வெளியிட்ட அறிவிப்பு விவரம்:
ஜேடியு தனது பங்கில் இருந்து முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சிக்கு 7 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. விகாஸ்ஷீல் இன்சான் கட்சிக்கு பாஜக தொகுதிகளை ஒதுக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் எந்தக் குழப்பமும் இல்லை. நாங்கள் இணைந்தே செயல்படுகிறோம். எதிர்காலத்திலும் இணைந்தே செயல்படுவோம் என்றார் அவர்.
"தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, முதல்வர் பதவியை எந்தக் கட்சியைச் சேர்ந்தவருக்கு அளிப்பது என்பதில் சிக்கல் வருமா?' என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சுஷீல் குமார் மோடி பதிலளித்தார். அவர் கூறியதாவது: 
தேர்தலில் எங்கள் கூட்டணியில் எந்தக் கட்சி எத்தனை இடங்களைக் கைப்பற்றுகிறது என்பது எங்களுக்கு முக்கியமல்ல. முதல்வராக நிதீஷ்குமார்தான் பதவியேற்பார். அதில் எந்தக் குழப்பமும் இல்லை. 
சிலர் (எல்ஜேபி தலைவர் சிராக் பாஸ்வான்) தங்கள் மகிழ்ச்சிக்காக தேவையற்ற விஷயங்களைப் பேசுவர். அதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை.
பிகாரில் ஜேடியு ஒருபோதும் கூட்டணிக் கட்சிகளை தரக்குறைவாக நடத்தியதில்லை. ஜேடியுவின் ஆதரவில்லாமல்தான் ராம் விலாஸ் பாஸ்வான் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டாரா? என்றார் சுஷீல் குமார் மோடி.

மத்தியில் மட்டுமே எல்ஜேபியுடன் கூட்டணி- 

பாஜக: மத்தியில் மட்டுமே பாஜக கூட்டணியில் எல்ஜேபி அங்கம் வகிக்கும் என்று பாஜக மாநிலத் தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறினார். பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும், பேரவைத் தேர்தலை தனித்து சந்திப்பதாகவும் இரு தினங்களுக்கு முன் எல்ஜேபி அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், சஞ்சய் ஜெய்ஸ்வால் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
மத்தியில் மட்டுமே பாஜக கூட்டணியில் லோக் ஜனசக்தி கட்சி (எல்ஜேபி) உள்ளது.
பிகாரில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முகமாக நிதீஷ் குமார் இருப்பார். அவரின் அனுமதியின்றி கூட்டணியில் இணையவோ, கூட்டணியில் இருந்து வெளியேறவோ முடியாது. பாஜக-ஜேடியு கூட்டணியைப் பிரிக்க முடியாது. 
இதய அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சரும், எல்ஜேபி தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வான் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம் என்றார் அவர்.
பிகாரில் சட்டப் பேரவைத் தேர்தல், வரும் அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com