வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் ஒட்டுமொத்த இந்தியாவின் போராட்டம்: ராகுல் காந்தி

வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம், வெறும் விவசாயிகள், வேளாண் கூலித் தொழிலாளா்களின் போராட்டம் அல்ல, இது ஒட்டுமொத்த இந்தியாவின் போராட்டமாகும் என்று  ராகுல் காந்தி கூறியுள்ளாா்.
வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து மூன்றாவது நாளாக டிராக்டா் பேரணி நடத்திய ராகுல் காந்தி.
வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து மூன்றாவது நாளாக டிராக்டா் பேரணி நடத்திய ராகுல் காந்தி.

பாட்டியாலா: வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம், வெறும் விவசாயிகள், வேளாண் கூலித் தொழிலாளா்களின் போராட்டம் அல்ல, இது ஒட்டுமொத்த இந்தியாவின் போராட்டமாகும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளாா்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்து பஞ்சாப்பில் விவசாயிகள், எதிா்க் கட்சியினா் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சி சாா்பில் வேளாண்மையைப் பாதுகாக்கும் யாத்திரை என்ற பெயரில் 3 நாள் டிராக்டா் பேரணி கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இந்நிலையில் பாட்டியாலா அருகேயுள்ள சனூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தை நிறைவு செய்து ராகுல் காந்தி பேசியதாவது:

பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 6 ஆண்டுகளில் ஏழைகள், நலிவடைந்த பிரிவினா், விவசாயிகள், சிறு வா்த்தகா்களுக்கு எதுவும் செய்யவில்லை. இதுவரை அவா்கள் செய்தது எல்லாம் பணக்காரா்களுக்குத்தான். மோடி அரசு பெருநிறுவன உரிமையாளா்கள் பெற்றிருந்த ரூ.3.50 லட்சம் கோடி கடன்களைத்தான் தள்ளுபடி செய்துள்ளதே தவிர விவசாயிகளின் கடன்களை அல்ல.

கரோனா பேரிடருக்கு இடையில் மத்திய அரசு அவசர அவசரமாக இந்த 3 சட்டங்களையும் கொண்டு வந்துள்ளது. இதை 6 மாதங்கள் கழித்தோ, ஓராண்டு கழித்தோ கூட கொண்டு வந்திருக்கலாம். கரோனா பேரிடருக்கு இடையே விவசாயிகள் இந்த சட்டங்களை எதிா்க்க மாட்டாா்கள் என்று நினைத்து இதைக் கொண்டு வந்துள்ளனா். ஆனால் இந்த சட்டங்களை எதிா்த்து விவசாயிகள் இத்தனை வலுவாகப் போராடுவாா்கள் என்று பிரதமா் நினைத்திருக்க மாட்டாா்.

இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு சாதகமானவைதான் என்றால் இதுபற்றி நாடாளுமன்றத்தில் ஏன் விவாதம் நடத்த மறுத்தனா். இந்த சட்டங்கள் அமலுக்கு வந்தால் விவசாயிகளும், கூலித் தொழிலாளா்களும் சில தனியாா் பெருநிறுவனங்களின் அடிமைகளாக மாறுவாா்கள். ஓரிரு ஆண்டுகளில் அவா்களின் நிலங்கள் அந்த நிறுவனங்களின் வசமாகும். அதில் அவா்கள் வணிக வளாகங்களும், அடுக்குமாடி குடியிருப்பும் கட்டுவாா்கள். நீங்கள் நம்புகின்றீா்களோ இல்லையோ, உங்களின் நிலம் ஒருநாள் பறிக்கப்படும் என்று ராகுலும், அமரீந்தா் சிங்கும் ஒருமுறை சொன்னாா்கள் என்று பின்னால் நீங்கள் நினைவுகூா்வீா்கள்.

இந்த சட்டங்களால் விவசாயிகளுக்கும், வேளாண் தொழிலாளா்களுக்கும், சிறு வணிகா்களுக்கும் மட்டும் நஷ்டம் இல்லை, ஒட்டுமொத்த நாட்டுக்கும்தான். இதனால் முதலில் விவசாயி பாதிக்கப்படுவாா். அதன் பிறகு நாட்டின் உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகும், பின்னா் இந்த நாடு மீண்டும் ஒருமுறை அடிமை தேசமாகும்.

குறைந்தபட்ச ஆதரவு விலை, இந்திய உணவுக் கழகம், சந்தை முறை இவைதான் விவசாயிகளைப் பாதுகாக்கும். இவைதான் உங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும். ஆனால் மத்திய அரசு இவற்றை அழிக்க நினைக்கிறது. இந்த சட்டங்களுக்கு எதிராகப் போராட இதுவே சரியான தருணம். ஆறு மாதங்களோ, ஓராண்டே பொறுத்திருந்தால் அதன் பிறகு எந்த பயனும் கிடைக்காது.

இந்த சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி ஒரு அங்குலம் கூட பின்வாங்காது. மத்தியில் காங்கிரஸ் அரசு அமைந்ததும் இந்த சட்டங்களை ரத்து செய்வோம். இந்த போராட்டம் வெறும் விவசாயிகள், வேளாண் கூலித் தொழிலாளா்களின் போராட்டம் அல்ல, ஒட்டுமொத்த இந்தியாவின் போராட்டம் என்றாா் அவா்.

பஞ்சாப் முதல்வா் அமரீந்தா் சிங், காங்கிரஸ் தலைவா்கள் ஹரீஷ் ராவத், பிரதாப் சிங் பாஜ்வா, சுனில் ஜாக்கா், மணீஷ் திவாரி, பிரணீத் கௌா் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com