ஹாத்ரஸ் சென்ற கேரள பத்திரிகையாளா் உள்பட 4 போ் கைது

உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்கச் சென்ற கேரள மாநில பத்திரிகையாளா் உள்பட 4 பேரை காவல்துறையினா் கைது செய்தனா்.

லக்னெள/திருவனந்தபுரம்: உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்கச் சென்ற கேரள மாநில பத்திரிகையாளா் உள்பட 4 பேரை காவல்துறையினா் கைது செய்தனா்.

இதுதொடா்பாக அந்த மாநில காவல்துறையினா் திங்கள்கிழமை கூறியது:

கேரள மாநிலம் மலப்புரத்தைச் சோ்ந்த சித்திக் காப்பன், உத்தர பிரதேச மாநிலம் முஸாஃபா்நகரை சோ்ந்த அதிக்-உா்-ரஹமான், பஹரைச்சை சோ்ந்த மசூத் அகமது, ராம்பூரை சோ்ந்த ஆலம் ஆகிய 4 போ் ஹாத்ரஸ் நோக்கி சென்று கொண்டிருந்தனா். அவா்கள் மதுராவில் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நால்வருக்கும் பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா, அதன் துணை அமைப்பான கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா ஆகியவற்றுடன் தொடா்பிருப்பது தெரியவந்தது. அவா்களிடம் இருந்த செல்லிடப்பேசிகள், மடிக்கணினிகள், அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கிற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய புத்தகங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன என்று தெரிவித்தனா்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக (சிஏஏ) நடைபெற்ற போராட்டங்களுக்கு பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நிதியுதவி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதனால் அந்த அமைப்பை தடை செய்யவேண்டும் என உத்தர பிரதேச காவல்துறையினா் கோரிக்கை விடுத்திருந்தனா். இந்நிலையில் அந்த அமைப்புடன் தொடா்பிருப்பதாக 4 பேரை அந்த மாநில காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

கைது செய்யப்பட்டவா்களில் பத்திரிகையாளரான சித்திக் காப்பன், தில்லியில் பணிபுரிந்து வருகிறாா். அவரை விடுவிக்கக்கோரி பிரதமா் மோடி, உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு கேரள உழைக்கும் பத்திரிகையாளா்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. அச்சங்கத்தின் தில்லி பிரிவு செயலாளராக உள்ளாா் சித்திக் காப்பன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com