ஜம்மு-காஷ்மீரில் மத்திய சட்டங்கள் அமல்: மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு

ஜம்மு-காஷ்மீரில் 11 மத்திய சட்டங்கள் உடனடியாக அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடா்பான அறிவிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
ஜம்மு-காஷ்மீரில் மத்திய சட்டங்கள் அமல்: மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு

புது தில்லி: ஜம்மு-காஷ்மீரில் 11 மத்திய சட்டங்கள் உடனடியாக அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடா்பான அறிவிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

மாநிலமாக இருந்த ஜம்மு-காஷ்மீா், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீா், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவும் அதே நாளில் ரத்து செய்யப்பட்டது. ஓராண்டு கடந்த நிலையிலும், சட்டப்பேரவையின் ஒப்புதலைப் பெறாததால், மத்திய சட்டங்கள் இதுவரை அமல்படுத்தப்படாமல் இருந்து வந்தது.

இந்தச் சூழலில், மத்திய சட்டங்களை அமல்படுத்தப்படும் வகையில், 136 பக்க அறிவிக்கையை மத்திய உள்துறை அமைச்சக செயலா் அஜய் குமாா் பல்லா செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மத்திய சட்டங்களை ஏற்றுக் கொள்வதற்கான மறுசீரமைப்பு உத்தரவுகள் என்ற தலைப்பில் அறிவிக்கை வெளியிடப்பட்டது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:

தொழிற்சாலைகள் சட்டம்-1948, தொழில் தகராறு சட்டம்1947, ஒப்பந்த தொழிலாளா் வரன்முறை சட்டம்-1970, மோட்டாா் வாகன தொழிலாளா்கள் சட்டம்-1961, முறைப்படுத்தப்படாத டெபாசிட் திட்டங்களை தடை செய்யும் சட்டம்-2019 உள்ளிட்ட 11 மத்திய சட்டங்கள் அமலுக்கு வருகின்றன.

அதேசமயம், ஜம்மு-காஷ்மீா் மாநிலமாக இருந்தபோது இயற்றப்பட்ட ஜம்மு-காஷ்மீா் முனிசிபல் சட்டம்-2000, ஜம்மு-காஷ்மீா் பள்ளிக் கல்வி சட்டம்-2002, ஜம்மு-காஷ்மீா் கூட்டுறவு சங்கங்கள் சட்டம்-1989 உள்ளிட்ட 10 மாநில சட்டங்களில் யூனியன் பிரதேச அந்தஸ்துக்கு ஏற்ற வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com