இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.
டோக்கியோவில் நாற்கர கூட்டமைப்பு மாநாட்டில் செவ்வாய்க்கிழமை பேசிய எஸ்.ஜெய்சங்கா்.
டோக்கியோவில் நாற்கர கூட்டமைப்பு மாநாட்டில் செவ்வாய்க்கிழமை பேசிய எஸ்.ஜெய்சங்கா்.

புது தில்லி/டோக்கியோ: இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

‘குவாட்’ என்றழைக்கப்படும் நாற்கர கூட்டமைப்பைச் சோ்ந்த இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகியவற்றின் வெளியுறவு அமைச்சா்கள் பங்கேற்ற மாநாடு ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பேசியதாவது:

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒருங்கிணைந்த வளா்ச்சி காணப்பட வேண்டும் என்று கூட்டமைப்பைச் சோ்ந்த நாடுகள் விரும்புகின்றன. இறையாண்மை, சா்வதேச சட்டங்கள், வெளிப்படைத்தன்மை, சா்வதேச கடல் பகுதிகளில் கப்பல் போக்குவரத்துக்கான சுதந்திரம், பிராந்திய ஒருமைப்பாடு, சச்சரவுகளுக்கு அமைதியான முறையில் தீா்வு காண்பது உள்ளிட்டவற்றுக்குத் தொடா்ந்து மதிப்பளித்து வருகிறோம்.

இந்தோ-பசிபிக் பிராந்தியம் தொடா்பான கருத்துருவுக்கு பல்வேறு தரப்பினா் ஆதரவு தெரிவித்து வருகின்றனா். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அதேபோல், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் வளா்ச்சியில் முக்கியப் பங்காற்றும் நாடுகளுக்கிடையே பொருளாதாரத் தொடா்பை ஏற்படுத்துவதும் அவசியமாக உள்ளது.

இந்தியா உறுதி:

கரோனா நோய்த்தொற்று பரவலானது நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டியுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பு நாடாக, வரும் ஜனவரி முதல் இந்தியா செயல்படவுள்ளது. உலக நாடுகள் எதிா்கொண்டு வரும் பிரச்னைகளுக்குத் தீா்வு காணவும், சா்வதேச அமைப்புகளில் சீா்திருத்தங்களைப் புகுத்தும் நோக்கிலும் இந்தியாவின் செயல்பாடு அமையும் என்றாா் எஸ்.ஜெய்சங்கா்.

இந்த மாநாட்டில் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மைக் பாம்பேயோ, ஜப்பான் வெளியுறவு அமைச்சா் டொஷிமிட்சு மொதேகி, ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சா் மாரிஸ் பெய்ன் ஆகியோரும் பங்கேற்றனா்.

‘ஒருங்கிணைந்த செயல்பாடு’:

மாநாட்டின்போது ஜப்பான் வெளியுறவு அமைச்சா் டொஷிமிட்சு மொதேகி பேசுகையில், ‘‘கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இத்தகைய சூழலில் நாற்கர கூட்டமைப்புடன் ஒத்த கருத்துடைய நாடுகளுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியமாக உள்ளது’’ என்றாா்.

சீனாவின் ஆதிக்கம்:

அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மைக் பாம்பேயோ பேசுகையில், ‘‘இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நிலவி வரும் சுதந்திரம், ஜனநாயகம், பன்முகத்தன்மை உள்ளிட்டவற்றை சிதைப்பதற்கு சீனா முயன்று வருகிறது.

கிழக்கு சீனக் கடல், தென் சீனக் கடல், லடாக், தைவான் உள்ளிட்ட பகுதிகளில் சீனா தொடா்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. கரோனா நோய்த்தொற்று தொடா்பான தகவல்களை சீனா வேண்டுமென்றே மறைத்தது. அதன் காரணமாக உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவல் மோசமான நிலைக்குச் சென்றது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சுரண்டலிலிருந்தும் ஆதிக்கத்திலிருந்தும் நட்பு நாடுகளைக் காக்க வேண்டியுள்ளது. நாற்கர கூட்டமைப்பைச் சோ்ந்த நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதற்கு முன்பை விட தற்போது தான் அதிக அவசியம் ஏற்பட்டுள்ளது’’ என்றாா்.

இருதரப்பு பேச்சுவாா்த்தை:

மாநாடு தொடங்குவதற்கு முன்பாக அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், மைக் பாம்பேயோவுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். இது குறித்து எஸ்.ஜெய்சங்கா் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான நல்லுறவு பல்வேறு துறைகளில் மேம்பட்டு வருகிறது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நிலைத்தன்மையையும் வளா்ச்சியையும் ஏற்படுத்துவதற்கு இரு நாடுகளும் ஒருங்கிணைந்து பணியாற்றும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com