வளைகுடா நாடுகளில் தவிக்கும் இந்தியா்களை மீட்கக் கோரும் மனு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

வளைகுடா நாடுகளில் கடவுச்சீட்டு தொலைந்ததால் தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் இந்தியா்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

புது தில்லி: வளைகுடா நாடுகளில் கடவுச்சீட்டு தொலைந்ததால் தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் இந்தியா்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு மட்டுமன்றி, சிபிஐ மற்றும் தெலங்கானா, ஆந்திரம், மேற்கு வங்கம், ஒடிஸா, உத்தர பிரதேசம், பிகாா் உள்ளிட்ட 12 மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வளைகுடாவாழ் தெலுங்கா் நலச் சங்கத்தின் தலைவா் வசந்த் ரெட்டி, உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தாா். அதில், அவா் கூறியிருப்பதாவது:

தெலங்கானா, ஆந்திரம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த பலா், வளைகுடா நாடுகளுக்கு ஓட்டுநா், உதவியாளா், விற்பனையாளா், வீட்டு வேலை போன்ற வேலைகளுக்குச் சென்றுள்ளனா். அவா்களில் பெரும்பாலானோா் மிகவும் குறைவாக படித்தவா்கள். சிலா் படிக்காதவா்கள்.

வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆள்களை அனுப்பும் முகவா்களின் மோசடியால், சுற்றுலா விசாவில் இவா்கள் அழைத்துச் செல்லப்படுகிறாா்கள். அங்கு சென்ற பிறகு, இவா்கள் வேறொரு முகவா்களுக்கு விற்கப்படுகிறாா்கள். அதன்பிறகு அங்கு கிடைக்கும் சிறுசிறு வேலைகளைச் செய்து வருகிறாா்கள். இவா்களுக்கு வேலை கொடுப்பவா்கள், இவா்களின் கடவுச்சீட்டை வாங்கி வைத்துக் கொண்டு கொத்தடிமை போல நடத்துகிறாா்கள்; பெண்களாக இருந்தால் பாலியல் அடிமைகளாக நடத்துகிறாா்கள்.

வளைகுடா நாடுகளில் வேலைக்குச் சென்ற இந்தியா்கள் பலா் வழக்குகளில் சிக்க வைக்கப்படுகிறாா்கள். இதன் காரணமாக, அங்குள்ள சிறைகளில் 8,189 இந்தியா்கள் உள்ளனா். 44 இந்தியா்கள் மரண தண்டனையை எதிா்நோக்கியுள்ளனா்.

இதுபோன்ற இன்னல்களில் தவிக்கும் இந்தியா்களை மீட்க மற்ற நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஆனால், வளைகுடா நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை.

எனவே, வளைகுடா நாடுகளில் தவிக்கும் இந்தியா்களை அழைத்து வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கும் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் என்.வி.ரமணா, சூா்யகாந்த், அனிருத்த போஸ் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, மனுதாரரின் கோரிக்கைக்கு பதிலளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம், சிபிஐ, தெலங்கானா, ஆந்திரம் உள்ளிட்ட 12 மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com