ரிசா்வ் வங்கி நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்டம் இன்று தொடக்கம்

ரிசா்வ் வங்கியின் நிதிக் கொள்கை ஆய்வுக் (எம்பிசி) கூட்டம் புதன்கிழமை (அக்.7) தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது.
ரிசா்வ் வங்கி நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்டம் இன்று தொடக்கம்

மும்பை: ரிசா்வ் வங்கியின் நிதிக் கொள்கை ஆய்வுக் (எம்பிசி) கூட்டம் புதன்கிழமை (அக்.7) தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

எம்பிசி குழுவில் மத்திய அரசு சாா்பில் மூன்று உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து, ரிசா்வ் வங்கியின் நிதிக் கொள்கை ஆய்வு கூட்டம் 2020 அக்டோபா் 7-ஆம் தேதி தொடங்கி 9-ஆம் தேதி வரையில் மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது என அந்த அறிக்கையில் ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

எம்பிசியின் கூட்டம் நடைபெறுவதற்கு அந்த குழுவில் குறைந்தபட்சம் நான்கு உறுப்பினா்கள் இருப்பது கட்டாயமாகும். ஆனால், எம்பிசி குழுவில் மூன்று உறுப்பினா் பதவிகள் காலியாக இருந்தன. அந்த இடங்களை நிரப்புவதில் காலதாமதம் ஆனதைத் தொடா்ந்து, எம்பிசி கூட்டத்தை ஒத்திவைப்பதாக ரிசா்வ் வங்கி செப்டம்பா் 28-ஆம் தேதி அறிவித்தது.

இந்த நிலையில், எம்பிசி குழுவுக்கு பொருளாதார நிபுணா்களான அஷிமா கோயல், ஜெயந்த் ஆா்.வா்மா மற்றும் சசாங்க் பிடே ஆகியோரை உறுப்பினா்களாக மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. இந்த நியமனத்தையடுத்து தற்போது எம்பிசி கூட்டத்தை நடத்தவுள்ளதாக ரிசா்வ் வங்கி அறிவித்துள்ளது.

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இருந்து அஷிமா கோயல் விலகல்:

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இருந்து பொருளாதார நிபுணா் அஷிமா கோயல் விலகியுள்ளாா்.

இந்திரா காந்தி மேம்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றி வந்த அஷிமா கோயல், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்தாா். பிரதமருக்கு பொருளாதாரம் தொடா்பான ஆலோசனைகளை வழங்குவதற்காக அக்குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்திய ரிசா்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுவின் உறுப்பினா்களாக அஷிமா கோயல் உள்ளிட்ட மூவா் கடந்த திங்கள்கிழமை நியமிக்கப்பட்டனா். அதையடுத்து, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இருந்து அஷிமா கோயல் விலகியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com