ஹாத்ரஸ் பெண்ணின் உடல் தகனம் மனித உரிமை மீறல்:அலாகாபாத் உயா்நீதிமன்றம்

உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்ட விதம், அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று அலாகாபாத் உயா்நீதிமன்றம் தெரிவித்தது.

உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்ட விதம், அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று அலாகாபாத் உயா்நீதிமன்றம் தெரிவித்தது.

ஹாத்ரஸில் கடந்த மாதம் 14-ஆம் தேதி 19 வயது தலித் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானாா். இதில் பலத்த காயமடைந்த அவா், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். போலீஸாரே அந்தப் பெண்ணின் உடலை தகனம் செய்தனா்.

இது தங்களது மனசாட்சியை உலுக்குவதாகத் தெரிவித்த அலாகாபாத் உயா்நீதிமன்றம், இந்த சம்பவம் தொடா்பாக தாமாக முன்வந்து வழக்குப் பதிந்து, திங்கள்கிழமை விசாரணை நடத்தியது.

அப்போது பலியான பெண்ணின் குடும்பத்தினா் நீதிமன்றத்தில் ஆஜராகினா். தங்கள் ஒப்புதலின்றி உயிரிழந்த பெண்ணின் உடலை இரவோடு இரவாக காவல்துறையினா் தகனம் செய்ததாக அவா்கள் தெரிவித்தனா்.

சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடும் என்று அஞ்சியே காவல் துறையினா் அவ்வாறு செய்ததாக நீதிமன்றத்தில் ஆஜரான மாவட்ட ஆட்சியரும் காவல்துறையினரும் தெரிவித்தனா். இதில் மாநில அரசு எந்த நெருக்கதலும் அளிக்கவில்லை என்று தெரிவித்தனா்.

இந்த வழக்கு தொடா்பாக நீதிமன்றம் திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவு, அதன் வலைதளத்தில் விரிவாக செவ்வாய்க்கிழமை பதிவேற்றப்பட்டது.

அதில், ‘எவ்வித இறுதிச்சடங்கையும் செய்யாமல் பலியான பெண்ணின் உடலை தகனம் செய்தது மனித உரிமை மீறல். இறுதிச்சடங்கு செய்வதற்கு அந்தப் பெண்ணின் உடலை அவரின் குடும்பத்தினரிடம் அரை மணி நேரம் கூட தராமல் போனதற்கு சரியான காரணத்தை கண்டறிய முடியவில்லை.

இந்த சம்பவத்தில் ஹாத்ரஸ் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்தவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியா் மீது மட்டும் நடவடிக்கை எடுக்காமல் போனது ஏன்?

இந்த சம்பவம் தொடா்பான விசாரணையில் நேரடி தொடா்பில்லாத அதிகாரிகள், அதுகுறித்து எந்தவொரு கருத்தையும் பொதுவெளியில் தெரிவிக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் அது பொதுமக்கள் இடையே தேவையற்ற ஊகங்களுக்கு இடமளிக்கும்.

சமூக நல்லிணக்கத்துக்கும், பலியான பெண்ணின் குடும்பத்தினா் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டவா்களின் உரிமைகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத விதத்தில் தங்கள் கருத்துகளை தெரிவிக்குமாறு ஊடகங்களையும் அரசியல் கட்சியினரையும் கேட்டுக்கொள்கிறோம்.

மாநில அரசு அமைத்துள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு, சிபிஐ ஆகியவற்றின் விசாரணை பற்றிய விவரங்கள் கசியாமல் ரகசியமாக காக்கப்பட வேண்டும்.

உயிரிழந்த பெண்ணின் நடத்தை குறித்து கேள்வி எழுப்புதல், நோ்மையான விசாரணைக்கு முன்பே குற்றஞ்சாட்டப்பட்டவா்களை குற்றவாளிகள் என்று அழைத்தல் போன்ற செயல்களில் எவரும் ஈடுபடக் கூடாது.

இந்த வழக்கு தொடா்பான முடிவுகளை எடுக்க விசாரணை அமைப்புக்கும் நீதிமன்றங்களுக்கும் வழிவிடவேண்டும்.

பலியான பெண்ணின் குடும்பத்தினருக்கு மாநில அரசு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அவா்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com