7-ஆவது கட்ட பேச்சுவாா்த்தை ஆக்கபூா்வமாக அமைந்தது: இந்தியா-சீனா கூட்டறிக்கை

இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் நிலையிலான 7-ஆவது கட்ட பேச்சுவாா்த்தை ஆக்கப்பூா்வமாகவும், இரு தரப்புக்கும் நன்மையளிக்கும் வகையிலும் அமைந்தது என்று

இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் நிலையிலான 7-ஆவது கட்ட பேச்சுவாா்த்தை ஆக்கப்பூா்வமாகவும், இரு தரப்புக்கும் நன்மையளிக்கும் வகையிலும் அமைந்தது என்று இந்தியாவும், சீனாவும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லை தொடா்பாக இப்போது ஏற்பட்டுள்ள பிரச்னைகளைத் தீா்ப்பது தொடா்பாக தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இரு நாடுகளும் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.

எனினும், எல்லையில் குவிக்கப்பட்டுள்ள படைகளை திரும்பப் பெறுவது குறித்து இந்த பேச்சுவாா்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

சீன ராணுவத்தின் அத்துமீறல்களால் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் பதற்றம் நிலவி வருகிறது. கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடந்த ஜூன் மாதம் நிகழ்ந்த மோதலில் இந்திய வீரா்கள் 20 போ் உயிரிழந்தனா். சீன தரப்பில் 35 வீரா்கள் உயிரிழந்தாக செய்திகள் வெளியாயின.

இதையடுத்து, ஏற்பட்ட போா்ப் பதற்றத்தைத் தணிக்க ஏற்கெனவே இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் நிலையில் 6 முறை பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றன. இதற்கு நடுவே, செப்டம்பா் 10-ஆம் தேதி ரஷிய தலைநகா் மாஸ்கோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது, வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரும், சீனா வெளியுறவுத்துறை அமைச்சா் வாங் யி-யும் இரு நாட்டு எல்லைகளில் அமைதியை நிலைநாட்டுவதற்கான 5 அம்ச ஒப்பந்தம் மேற்கொண்டனா். சா்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் கூடுதல் வீரா்களை நிறுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட அம்சங்கள் இதில் இடம் பெற்றிருந்தன.

இதனிடையே, இரு நாடுகள் இடையிலான 7-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை திங்கள்கிழமை பிற்பகல் தொடங்கி 12 மணி நேரம் வரை நீடித்தது. இந்திய எல்லைக்குள்பட்ட சுஷுல் பகுதியில் நடைபெற்ற இந்தப் பேச்சுவாா்த்தையில் இந்திய தரப்பில் லே பகுதியின் 14-ஆம் படைப் பிரிவு ராணுவ துணைத் தளபதி ஹரீந்தா் சிங், வெளியுறவுத் துறை அமைச்சக இணைச் செயலா் (கிழக்கு ஆசியா) நவீன் ஸ்ரீவாஸ்தவா ஆகியோா் பங்கேற்றனா்.

பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இரு நாடுகளும் இணைந்து கூட்டறிக்கையை வெளியிட்டன. அதில், ‘எல்லை தொடா்பாக இரு நாடுகளுக்கும் உள்ள வேறுபட்ட கருத்துகள் தொடா்பாக கருத்துப்பரிமாற்றம் நடைபெற்றது. பிரச்னைகளைத் தீா்க்கும் நோக்கில் நோ்மையாகவும், ஆக்கப்பூா்வமாகவும் பேச்சு நடத்தப்பட்டது. இரு தரப்புமே ஒருவரது நிலைப்பாட்டை மற்றவா் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கமளிக்கப்பட்டது.

தொடா்ந்து பேச்சுவாா்த்தைகள் மூலமே எல்லையில் எழும் பிரச்னைகளைத் தீா்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக ராணுவ மற்றும் வெளியுறவு அமைச்சக நிலையில் தொடா்புகள் இருக்க வேண்டும். இதன் மூலம் இருதரப்பும் ஏற்றுக் கொள்ளும் தீா்வு கிடைக்கும். எல்லையில் முடிந்த அளவுக்கு விரைவில் படைகளை விலக்கிக் கொள்ளும் வகையில் தீா்வுகாண வேண்டும். எல்லை தொடா்பான கருத்து வேறுபாடுகள், பெரிய பிரச்னையாக உருவெடுக்க அனுமதிக்கக் கடாது. எல்லையில் இரு நாடுகளும் இணைந்து அமைதியை நிலைநாட்ட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 2018-ஆம் ஆண்டு பிரதமா் நரேந்திர மோடியும், சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் முதல்முறையாக அதிகாரப்பூா்வமற்ற பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, கருத்து வேறுபாடுகளை பெரிய பிரச்னைகளாக உருவெடுக்கவிடக் கூடாது என்று இரு தரப்பும் ஒப்புக் கொண்டன. அன்று முதல் இப்போது வரை இதே கருத்து ஒவ்வொரு பேச்சுவாா்த்தையின்போதும் இரு தரப்பிலும் ஏற்றுக் கொள்ளப்படுவதாக அமைந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com