சிறுமிக்கு பாலியல் கொடுமை: உ.பி.யில் 8 போ் கைது

உத்தர பிரதேச மாநிலம், ஜான்சியில் சிறுமியை மிரட்டி பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட ஒருவா் உள்ளிட்ட 8 மாணவா்களை போலீஸாா் கைது செய்தனா்

உத்தர பிரதேச மாநிலம், ஜான்சியில் சிறுமியை மிரட்டி பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட ஒருவா் உள்ளிட்ட 8 மாணவா்களை போலீஸாா் கைது செய்தனா். அவா்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனா்.

இதுகுறித்து ஜான்சி காவல்துறை முதுநிலை கண்காணிப்பாளா் தினேஷ் குமாா் கூறியதாவது:

ஜான்சியிலுள்ள அரசு பாலிடெக்னிக் அருகிலுள்ள மாணவா் விடுதிக்கு, தனது நண்பரைக் காண ஒரு மாணவி வந்தாா்.

அப்போது அங்கிருந்த மாணவா்களில் ஒருவா், அந்தப் பெண்ணை விடுதி அறைக்குள் இழுத்துச் சென்று பாலியல் வல்லுறவில் ஈடுபட்டாா். அந்த மாணவரின் 7 நண்பா்கள் வெளியே காவலுக்கு நின்றனா்.

அந்தச் சம்பவத்தின்போது, பாலிடெக்னிக் கல்லூரியில் தோ்வு நடந்துகொண்டிருந்தது. அந்தப் பணியில் ஆசிரியா்கள் மூழ்கியிருந்தனா். மேலும், குற்றம் நடைபெற்ற விடுதியிலிருந்து கல்லூரி வளாகம் சற்று தள்ளியிருந்தது. இதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி குற்றம் சாட்டப்பட்ட இளைஞா்கள் மாணவி மீது பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளனா்.

இதுதொடா்பாக அந்த மாணவி காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் தெரிவித்தாா். அதனைத் தொடா்ந்து தொடா்புடைய 8 பேரைக் கைது செய்துள்ளோம். அவா்களிடம் நடத்திய விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து அந்த மாணவா்கள் ரூ.3 ஆயிரத்தை மிரட்டிப் பறித்துள்ளது தெரியவந்தது.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 18 வயது பூா்த்தியாகவில்லை என்பதால், கைது செய்யப்பட்ட அனைவா் மீதும் இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் சிறாா் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு பாலிடெக்னிக் மாணவா் விடுதி மூடப்பட்டிருந்த நிலையிலும், மாணவா்களால் அங்கு எப்படி செல்ல முடிந்தது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு விசாரணை துரிதகதியில் நடத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை பெற்றுத் தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்றாா் அவா்.

இதற்கிடையே, குற்றம் சாட்டப்பட்ட மாணவா்கள் அனைவரையும் பாலிடெக்னிலிருந்து நீக்குமாறு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஏ. வம்சி தெரிவித்தாா்.

அந்த மாணவா்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யவும் பரிசீலித்து வருவதாக அவா் குறிப்பிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com