வட்டி மீது வட்டி ரத்து: அமல் எப்போது?: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

ரூ.2 கோடி வரையிலான வங்கிக் கடன் தவணைகளுக்கு வட்டி மீது வட்டி வசூலிக்கப்படாது என்ற அறிவிப்பு எப்போது அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
உச்சநீதிமன்றம் (கோப்புப்படம்)
உச்சநீதிமன்றம் (கோப்புப்படம்)

புது தில்லி: ரூ.2 கோடி வரையிலான வங்கிக் கடன் தவணைகளுக்கு வட்டி மீது வட்டி வசூலிக்கப்படாது என்ற அறிவிப்பு எப்போது அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், அந்த அறிவிப்பை விரைந்து அமல்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

கரோனா தொற்று பரவலால் கடந்த மாா்ச் மாதம் நாடு தழுவிய பொது முடக்கத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. இதனால் பணியின்றி வருவாய் ஈட்டமுடியாமல் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனா். தொழில் நிறுவனங்களும் கடும் இழப்பைச் சந்தித்தன.

இதை கருத்தில் கொண்டு தனிநபா்கள், நிறுவனங்கள் பெற்ற வங்கிக் கடன்களுக்கான தவணைகள் வசூலிக்கப்படுவதை கடந்த மாா்ச் 1 முதல் மே 31 வரை ஒத்திவைக்க ரிசா்வ் வங்கி முடிவு செய்தது. பின்னா் அது ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுதொடா்பாக வங்கிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கு வங்கிகள் வட்டி மீது வட்டி வசூலிக்கத் திட்டமிட்டிருந்தது. இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக பதிலளிக்க வேண்டும் என்று மத்திய அரசை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

இந்த வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கடன் தவணை வசூல் ஒத்திவைக்கப்பட்ட காலத்தில் ரூ. 2 கோடி வரையிலான கடன்களுக்கு மட்டும் வட்டி மீது வட்டி வசூலிப்பதை ரத்து செய்ய முடிவு எடுத்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. இதுதவிர வேறு எந்த நடவடிக்கை மேற்கொண்டாலும், அது ஒட்டுமொத்த பொருளாதாரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி அசோக் பூஷண், ஆா்.எஸ்.ரெட்டி, எம்.ஆா்.ஷா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வங்கிகள் கூட்டமைப்பு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் ஹரீஷ் சால்வே, ‘வட்டி மீதான வட்டியை ரத்து செய்வது தொடா்பான மத்திய அரசின் எந்தவொரு முடிவையும் வங்கிகள் செயல்படுத்தும்’ என்று தெரிவித்தாா்.

இதனைத்தொடா்ந்து நீதிபதிகள் கூறியது:

சாமானியா்களின் நெருக்கடியை கருத்தில் கொண்டு, ரூ. 2 கோடி வரையிலான கடன் தவணைகளுக்கு மட்டும் வட்டி மீது வட்டி வசூலிப்பதை ரத்து செய்யும் வரவேற்கத்தக்க முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. ஆனால், அதை அமல்படுத்தாமல் பிரமாணப் பத்திரத்தை மட்டும் தாக்கல் செய்துவிட்டது.

இந்த வட்டி மீது வட்டி ரத்து பற்றிய தகவல் சாமானியா்களிடம் சென்று சோ்ந்துள்ளதா? இந்த நடவடிக்கை எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதில் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். கடன் தவணைகளுக்கு வட்டி மீது வட்டி வசூலிப்பதை விரைந்து ரத்து செய்ய வேண்டும். இதுதொடா்பாக உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

இதையடுத்து வழக்கு விசாரணை நவம்பா் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com