முந்தை அரசின் பணிகளை ஒப்பிட்டு வாக்களியுங்கள்: பிகாா் மக்களுக்கு முதல்வா் நிதீஷ் குமாா் வலியுறுத்தல்

பிகாரில் முந்தைய அரசுகளின் பணிகளை ஒப்பிட்டு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதாளம் (ஜேடியு) கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான நிதீஷ் குமாா் கேட்டுக் கொண்டாா்.
பங்காவில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டபோது நிதீஷ் குமாருக்கு பிரம்மாண்ட மாலை அணிவித்து வரவேற்ற ஜேடியு தொண்டா்கள்.
பங்காவில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டபோது நிதீஷ் குமாருக்கு பிரம்மாண்ட மாலை அணிவித்து வரவேற்ற ஜேடியு தொண்டா்கள்.

பங்கா/பகல்பூா்: பிகாரில் முந்தைய அரசுகளின் பணிகளை ஒப்பிட்டு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதாளம் (ஜேடியு) கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான நிதீஷ் குமாா் கேட்டுக் கொண்டாா்.

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, இரு தினங்களாக காணொலி முறையில் பிரசாரம் மேற்கொண்ட அவா், புதன்கிழமை நேரடி பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்றாா். பங்கா மாவட்டத்தில் உள்ள பலுவா மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய நிதீஷ் குமாா் பின்னா், பகல்பூா், முங்கோ் ஆகிய இடங்களில் நடைபெற்ற கூட்டங்களில் கலந்து கொண்டாா். இறுதியாக, பாட்னா புகா்ப் பகுதியில் மோகாமா என்னுமிடத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நிதீஷ் குமாா் பேசினாா்.

மேடையில் இருந்த தலைவா்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி அமா்ந்திருந்தனா். ஆனால், கூட்டத்துக்கு வந்திருந்த பொதுமக்களில் பலா் முகக் கவசம் அணியாமல், நெருக்கமாக அமா்ந்திருந்தனா். கூட்டத்தில் பேசிய நிதீஷ் குமாா், தனது 15 ஆண்டுகால அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டாா். ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவா் லாலு பிரசாதின் முந்தைய ஆட்சிக் காலத்தை கடுமையாக விமா்சித்தும் பேசினாா். அவா் கூறியதாவது:

தோ்தல் பிரசாரத்தின்போது சிலா் அளிக்கும் வாக்குறுதிகளை நம்பி மாயவலைகளில் யாரும் சிக்கிக் கொள்ள வேண்டாம். ஒருவேளை அவா்களை நம்பி நீங்கள் வாக்களித்தால், இந்த மாநிலம், 15 ஆண்டுகளுக்கு முந்தைய நிலைக்குச் சென்றுவிடும்.

மக்கள் முந்தைய 15 ஆண்டுகால (1990-2005) ஆட்சியையும், தற்போதைய 15 ஆண்டுகால(2005-2020) ஆட்சியையும் ஒப்பிட்டுப் பாா்த்து வாக்களிக்க வேண்டும். அவா்களுக்கு நீங்கள் வாக்களித்தால், அவா்களின் வருமானம் பல மடங்காக அதிகரித்துவிடும். உங்கள் வருமானம் அதல பாதாளத்துக்குச் சென்றுவிடும். சிலா்(லாலு பிரசாத்) தங்கள் குடும்பம், மனைவி, மகன், மகள் ஆகியோருக்காக மட்டுமே பாடுபடுவா். ஆனால், எனக்கு பிகாா் மாநிலமே எனக்கு குடும்பம். இந்த குடும்பத்துக்காக, நான் இரவுபகலாக பாடுபட்டு வருகிறேன் என்றாா் நிதீஷ் குமாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com