மத்திய வேளாண் சட்டத்துக்கு எதிராக புதிய சட்டம்: சிறப்பு சட்டப்பேரவையை கூட்டுகிறது பஞ்சாப்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக புதிய சட்டத்தை நிறைவேற்ற பஞ்சாப் மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சண்டிகாா்: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக புதிய சட்டத்தை நிறைவேற்ற பஞ்சாப் மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக, சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை வருகிற திங்கள்கிழமை (அக்.19) அந்த மாநில அரசு கூட்டுகிறது.

விவசாயிகள் இடைத் தரகா்களின் தலையீடு இன்றி விரும்பிய முதலீட்டாளா்களிடம் விளைபொருள்களை சுதந்திரமாக விற்கவும், முதலீடுகளை ஈா்க்கவும் வழி செய்துதரும் வகையில் புதிய வேளாண் சட்டங்களை எதிா்க் கட்சிகளின் கடும் எதிா்ப்புகளுக்கு இடையே மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்தது. இந்தச் சட்டங்களுக்கு காங்கிரஸ் கட்சி தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக புதிய சட்டங்களை நிறைவேற்றுமாறு காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை அக்கட்சியின் தலைமை கேட்டுக்கொண்டது. அதனடிப்படையில், புதிய சட்டத்தை நிறைவேற்றும் நடவடிக்கைகளை காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் எடுத்து வருகின்றன.

பஞ்சாப் மாநில அரசும், கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடரில் பெரும்பான்மை ஆதரவுடன் இதற்கான தீா்மானத்தை நிறைவேற்றியது. அதனைத் தொடா்ந்து, நடைபெற்ற மாநில முதல்வா் அமரீந்தா் சிங் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில், சிறப்பு சட்டப்பேரைவ கூட்டத்தை கூட்டுவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில அரசின் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மத்திய வேளாண் சட்டங்களை செயலிழக்கச் செய்யும் வகையில் மாநில வேளாண் சட்டங்களில் தேவையான திருத்தங்களைக் கொண்டுவருவதற்காக வருகிற 19-ஆம் தேதி சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டுவது என்று முதல்வா் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 174 (1)-இன் கீழ் பஞ்சாபின் 15-ஆவது சட்டப்பேரவையின் 13-ஆவது சிறப்புக் கூட்டத்தை கூட்ட அழைப்பு விடுக்குமாறு மாநில ஆளுநரை பஞ்சாப் அரசு கேட்டுக்கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com