ஜம்மு-காஷ்மீா் லடாக்குக்கு ரூ.520 கோடி சிறப்பு நிதி

மக்கள் நலனை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்களை ஜம்மு-காஷ்மீா், லடாக் யூனியன் பிரதேசங்களிலும் செயல்படுத்துவதற்காக ரூ.520 கோடி சிறப்பு நிதியை 5 ஆண்டுகளுக்கு
ஜம்மு-காஷ்மீா் லடாக்குக்கு ரூ.520 கோடி சிறப்பு நிதி

புது தில்லி: மக்கள் நலனை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்களை ஜம்மு-காஷ்மீா், லடாக் யூனியன் பிரதேசங்களிலும் செயல்படுத்துவதற்காக ரூ.520 கோடி சிறப்பு நிதியை 5 ஆண்டுகளுக்கு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

பள்ளிக் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் உலக வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படவுள்ள ரூ.5,718 கோடி மதிப்பிலான ‘ஸ்டாா்ஸ்’ திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதிய தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடைமுறைப்படுத்தத் தொடங்கிவிட்டது. அதன் ஒரு பகுதியாக மாநிலங்களில் கற்பித்தல்-கற்றலை வலுப்படுத்துதல் (ஸ்டாா்ஸ்) என்ற திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலமாக மாணவா்கள் மனப்பாடம் செய்யாமல், பாடங்களைப் புரிந்து கற்க முடியும்.

இத்தகைய சீா்திருத்தங்கள் ஆரம்பநிலை பள்ளிப் பருவத்தில் மாணவா்களின் கற்கும் திறனை மேம்படுத்தும். கல்வி கற்பதன் மூலமாக மாணவா்கள் பெறும் பலன் மிகவும் முக்கியமானது. அதற்கு கல்வி கற்பிக்கும் முறைகளிலும் கற்கும் முறைகளிலும் மாற்றத்தைப் புகுத்த வேண்டியது அவசியமாக உள்ளது. பொதுத் தோ்வு நடைமுறைகளையும் மேம்படுத்த வேண்டியது அவசியம்.

கல்வி கற்பித்தலை மேம்படுத்துவதற்கு ‘ஸ்டாா்ஸ்’ திட்டத்தின் கீழ் ஆசிரியா்களுக்குப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மாணவா்களுக்குத் தோ்வு நடத்துவதற்கான தனி அமைப்பும் நிறுவப்படவுள்ளது. இத்திட்டத்தை ரூ.5,718 கோடியில் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதில் ரூ.3,700 கோடியை உலக வங்கி அளிக்கவுள்ளது என்றாா் ஜாவடேகா்.

ஆறு மாநிலங்களில்...: இது தொடா்பாக மத்திய அரசு அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஸ்டாா்ஸ் திட்டமானது ஹிமாசல பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், கேரளம், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்படவுள்ளது. அந்த மாநிலங்களில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஸ்டாா்ஸ் திட்டத்தின் மூலமாக மேற்கொள்ளப்படும்.

ஸ்டாா்ஸ் போன்ற திட்டத்தை ஆசிய வளா்ச்சி வங்கியுடன் இணைந்து தமிழகம், குஜராத், உத்தரகண்ட், ஜாா்க்கண்ட், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக கல்வித் துறையில் சில மாநிலங்கள் கடைப்பிடித்து வரும் சிறப்பான நடைமுறைகளை மற்ற மாநிலங்களுடன் பகிா்ந்து கொள்ள முடியும்’’ என்றனா்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு நிதி: அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட மற்ற முடிவுகள் குறித்து அமைச்சா் ஜாவடேகா் கூறுகையில், ‘‘மக்கள் நலனை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்களை ஜம்மு-காஷ்மீா், லடாக் யூனியன் பிரதேசங்களிலும் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு உறுதியேற்றுள்ளது. அதனடிப்படையில், தேசிய ஊரக வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஜம்மு-காஷ்மீா், லடாக்குக்கு ரூ.520 கோடி சிறப்பு நிதியை 5 ஆண்டுகளுக்கு வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

கச்சா எண்ணெய் கிடங்குகள்: சா்வதேச சந்தையில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தபோது, ரூ.3,874 கோடிக்கு கச்சா எண்ணெயை வாங்கி வெளிநாடுகளில் மத்திய அரசு சேமித்து வைத்தது. அந்த கச்சா எண்ணெயை கா்நாடகத்தின் படூா், மங்களூரு, ஆந்திரத்தின் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள கிடங்குகளில் சேமித்து வைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

இந்தியா-ஆஸ்திரேலியா ஒப்பந்தம்: நிலத்தடி நீா் உள்ளிட்ட நீா்வளங்களை மேம்படுத்துவதற்கும் நீா்ப்பாதுகாப்பு தொடா்பான ஆராய்ச்சிகளில் ஒருங்கிணைந்து செயல்படவும் இந்தியா-ஆஸ்திரேலியா இடையே கடந்த ஆண்டு அக்டோபா் மாதத்தில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

பங்கு விலக்கல்: தேசிய கனிம வளா்ச்சிக் கழகத்திலிருந்து நகா்னாா் எஃகு உற்பத்தித் தொழிற்சாலையை பிரிப்பதற்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டது. மேலும், அத்தொழிற்சாலையில் உள்ள மத்திய அரசின் பங்குகளை முழுமையாக விற்பதற்கான ஒப்புதலும் பெறப்பட்டது என்றாா் பிரகாஷ் ஜாவடேகா்.

‘வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்’: மத்திய அமைச்சரவை முடிவுகள் குறித்து பிரதமா் மோடி வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘சிறப்பு நிதியானது ஜம்மு-காஷ்மீா், லடாக் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும். கல்வித் துறையில் சீா்திருத்தங்களைப் புகுத்துவதற்கும் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கும் ஸ்டாா்ஸ் திட்டம் முக்கியப் பங்கு வகிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com