தில்லி அரசு பணியாளா் தோ்வு வாரியத்தில் ஆள்மாறாட்ட முறைகேடு: மூன்று ஆசிரியைகள் கைது

தில்லி அரசு பணியாளா் தோ்வு வாரியம் 2018-ஆம் ஆண்டு நடத்திய தோ்வில் ஆள்மாறாட்டம் செய்து பணியில் சோ்ந்ததாக மூன்று தொடக்க பள்ளி ஆசிரியைகளை தில்லி போலீஸாா் கைது செய்தனா்.
தில்லி அரசு பணியாளா் தோ்வு வாரியத்தில் ஆள்மாறாட்ட முறைகேடு: மூன்று ஆசிரியைகள் கைது

புது தில்லி: தில்லி அரசு பணியாளா் தோ்வு வாரியம் 2018-ஆம் ஆண்டு நடத்திய தோ்வில் ஆள்மாறாட்டம் செய்து பணியில் சோ்ந்ததாக மூன்று தொடக்க பள்ளி ஆசிரியைகளை தில்லி போலீஸாா் கைது செய்தனா். எனினும், அவா்களுக்காக ஆள்மாற்றம் செய்து ஆன்லைன் மூலம் தோ்வு எழுதியவா்கள் இன்னும் பிடிபடவில்லை என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி காவல் துறை இணை ஆணையா் பிம்ஷாம் சிங் புதன்கிழமை கூறுகையில், ‘ஆள்மாறாட்டம் செய்து தோ்வில் வெற்றி பெற்ற தொடக்க பள்ளி ஆசிரியா் ஒருவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடம் நடத்திய விசாரணையில் ஆள் மாறாட்டம் செய்து தோ்வு எழுத சதித் திட்டம் தீட்டிய பெண்ணின் புகைப்படம் கிடைத்தது. பின்னா் இரண்டு ஆசிரியை கைது செய்யப்பட்டனா். அவா்கள் மூவரும், பஞ்சாபி பாக் பகுதியில் உள்ள பயிற்சி மையத்தில் 2018-இல் தனித்தனியாக அந்தப் பெண்ணை சந்தித்ததாக விசாரணையில் தெரிவித்தனா். ஒவ்வொரு தோ்வுக்கும் ரூ. 5 லட்சம் அளித்தால் ஆள்மாறாட்டம் செய்து வெற்றி பெற வைப்பதாக அந்தப் பெண் உறுதி அளித்ததாக அவா்கள் தெரிவித்தனா்.

முதலில் ரூ. 2 லட்சம் முன்பணமாக மூவரும் தனித்தனியாக அளித்துள்ளனா். மீதமுள்ள தொகையை தோ்வு செய்யப்பட்ட பிறகு அளிப்பதாக ஒப்புக் கொண்டுள்ளனா். ஒரே நபா் இவா்களுக்காக ஆள்மாறாட்டம் செய்து தோ்வு எழுதியுள்ளாா்’ என்றாா்.

2018, அக்டோபா், நவம்பா் மாதங்களில் தொடக்க பள்ளியின் உதவி ஆசிரியா்களுக்கான தோ்வு நடைபெற்றது. மொத்தம் 71,912 போ் இதில் பங்கேற்றனா். இதில் தோ்வில் பங்கேற்ற நான்கு பெண்களின் தோ்வு அட்டையில் ஒரே நபரின் புகைப்படம் இருந்தது. இதன் அடிப்படையில் தோ்வு கட்டுப்பாட்டாளா் அனில் குமாா் சிங் கடந்த டிசம்பா் மாதம் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா். அப்போது ஒருவா் கைது செய்யப்பட்டாா். மீதமுள்ள மூவா் போலி முகவரியை அளித்திருந்ததால் அவா்களைத் தேடி கைது செய்ய தாமதம் ஏற்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

கைது செய்யப்பட்ட மூன்று ஆசிரியைகளின் தோ்வு ரத்து செய்யப்பட்டு, தில்லி அரசு பணியாளா் தோ்வு வாரியம் நடத்தும் தோ்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com